புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள பெரியாளூர் கிராமத்தில் ஒரு பசுமை வீட்டில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டுவந்தது.
அந்த கிராம இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் வரை புகார் கொடுத்தனர். அதன் பிறகு அருகிலேயே அரசு விதிகளுக்கு புறம்பாக திடீர் கொட்டகை அமைத்து டாஸ்மாக் கடையை தொடர்ந்தார்கள்.
தமிழ்நாட்டில் நீதிமன்ற உத்தரவுப்படி பிரதான சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றினாலும் அந்த கடைகளை கிராமங்களுக்குள் வைத்து அரசு வருமானத்தை பெருக்கி வருகிறது.
ஆனால் நீதிமன்ற உத்தரவுகளை மீறி மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மறுபடியும் கடந்த மாதம் பல கடைகளை நீதிமன்றமே மூடியது.
கடைகள் மூடப்பட்டாலும் கடைகள் இருந்த இடத்தில் மட்டுமின்றி பெட்டிக்கடைகள் வரை மது விற்பனை அமோகமாக நடக்கிறது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் தமிழக அரசு மது விற்பனையை தடுக்க எந்த உத்தரவும் இல்லை என்று சொல்லிவிட்டு மாதா மாதம் மாமூல் வசூலை கவனித்து வருகிறது.
இந்த நிலையில் தான் மீண்டும் அப்பகுதி இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் செல்லும் வழியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.
அந்த கடையை மூடுங்கள் என்று பல முறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை. அதனால் அறந்தாங்கி - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் பெரியாளூர் விலக்கு சாலையில் பெரியாளூரில் நடுநிலைப்பள்ளி அருகில் டாஸ்மாக் என்ற வழிகாட்டி பதாகையை வைத்துள்ளனர்.
அந்த பதாகையில் பள்ளி மாணவர், அலுவலர், விவசாயி அனைவரும் மதுவோடு இருப்பது போன்ற படமும் வைத்துள்ளனர். இந்த பதாகை வைத்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் எந்த அதிகாரியும் டாஸ்மாக் கடையையும் அகற்றவில்லை. அந்த வழிகாட்டி பதாகையையும் அகற்றவில்லை. இந்த வழியாகத்தான் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் மது விலக்கும் துறை அதிகாரிகளும் போய் வருகிறார்கள்.
இளைஞர்களின் கோபம் வழிகாட்டி பதாகையாக நிற்கிறது ஆனால் அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவில்லை என்கின்றனர் வருத்ததுடன் அவ்வுர் மக்கள்.