மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு ஸ்மிரிதி இரானி வசம் வழங்கப்பட்டதும் அவர் அந்தத் துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த இந்திய தகவல் பணி (ஐ.ஐ.எஸ்) அதிகாரிகள் நூற்றுக்கணக்கானோரை திடீரென பல தொலைதூர மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்தார்.
மத்திய அரசுப் பணி அதிகாரிகளின் சேவை விதிகளின்படி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் ஒரே பணியில் நீடித்து வருவோரை மட்டுமே பணியிட மாற்றம் செய்ததாக ஸ்மிரிதி இரானி அலுவலகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு துறைக்கும் தகவல் அதிகாரிகளாக ஐ.எஸ்.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். மத்திய அரசின் தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு செல்வதை இந்த அதிகாரிகள் உறுதிப்படுத்துவார்கள்.
இந்நிலையில், ஸ்மிரிதி இரானியின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள், அவர்கள் வைத்திருக்கும் சங்கத்தின் சார்பில் பிரதமர் அலுவலகத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் கடிதம் அனுப்பினார்கள்.
அதில், மத்திய அமைச்சரின் திடீர் நடவடிக்கையால் அரசுத் துறைகளின் செயல்பாடு பற்றிய தகவல்களை புதிய அதிகாரிகள் புரிந்து கொண்டு செயல்படுவது கடினமாக இருக்கும் என்றும் பட்ஜெட் நிகழ்வு நடைபெறும் வேளையில் இந்த இடமாற்றல் நடவடிக்கை சில விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு கிடைத்த சில நாட்களில், அந்த சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான மூத்த ஐ.எஸ்.எஸ். அதிகாரிகளை ஸ்மிரிதி இரானி இடமாற்றல் செய்து நடவடிக்கை எடுத்தாக கூறப்பட்டது.
இதேபோல, மத்திய அரசு அனுமதியுடன் செயல்பட்டு வந்த தனியார் தொலைக்காட்சிகள், செயற்கைகோள் ஒளிபரப்பு சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களின் ஆகியவற்றின் உரிமம் புதுப்பிக்கும் பணியிலும் ஸ்மிரிதி இரானியின் அலுவலகம் தலையிட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்தியாவின் முன்னோடி செய்தி நிறுவனங்கள், மாநில மொழிகளில் ஒளிபரப்பாகி வந்த தனியார் தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் வருடாந்திர உரிமம் புதிப்பிப்பு தொடர்புடைய கோப்புகள் அனைத்தும் அரசுத் துறைச் செயலாளர் மூலமாக ஒப்புதல் அளிக்கப்பட்டு வழக்கத்தை மாற்றி, அனைத்து கோப்புகளும் தனது பரிசீலனைக்கு பிந்தைய ஒப்புதலுக்குப் பிறகே உரிமம் புதிப்பிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை ஸ்மிரிதி இரானியின் அலுவலகம் கடைப்பிடித்ததாகவும் சர்ச்சை எழுந்தது.
இந்த விவகாரம் குறித்தும் பிரதமர் அலுவலகத்துக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஊடக சுதந்திரத்தில் ஸ்மிரிதி இரானியின் தலையீடு அதிகரிப்பதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், ஸ்மிரிதி இரானியின் வசம் இருந்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் திங்கட்கிழமை இரவு பறிக்கப்பட்டுள்ளது.
மத்திய மனித வள அமைச்சராக இருந்தபோது, தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரம், டெல்லி பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்கள் பதவி நீக்கம் போன்ற நடவடிக்கைகளால் சர்ச்சைக்குள்ளானார்.
முன்னதாக, கல்வித்தகுதி சர்ச்சையிலும் ஸ்மிரிதி இரானி சிக்கினார். தேர்தல் ஆணையத்தில் 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவில் டெல்லி பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் பி.ஏ. பட்டம் படித்ததாக ஸ்மிரிதி கூறியிருந்தார்.
ஆனால், 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவில் அவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி பள்ளி மூலம் இளங்கலை வணிகவியல் பட்டம் படித்ததாக கூறியிருந்தார்.
மேலும் யேல் பல்கலைக்கழகத்தில் 2013-ஆம் ஆண்டில் பட்டம் படித்ததாகவும் ஸ்மிரிதி குறிப்பிட்டிருந்தார். ஆனால், தங்கள் பல்கலைக்கழகத்தில் அவர் வெறும் ஒரு வார தலைமைப்பண்புக்கான பயிற்சிப் பட்டறையில் மட்டுமே பங்கேற்றதாக அந்த பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தியது.
இது போல பல்வேறு சர்ச்சைகளில் ஸ்மிரிதி இரானி அமைச்சரானது முதல் சிக்கி வந்துள்ளார். இருப்பினும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகளின்போது மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை கட்டுப்படுத்தக் குரல் கொடுப்பதில் ஸ்மிரிதி இரானி முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார்.
இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நன்மதிப்புடன் விளங்கும் அமைச்சராக ஸ்மிரிதி இரானி கருதப்பட்டு வந்த நிலையில், அவர் வகித்து வந்த இரு துறைகளில் ஒன்று திங்கட்கிழமை இரவு பறிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோதி அமைச்சரவையில் கடந்த 2014-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிரிதி இரானி நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு அத்துறையில் இருந்து மாற்றப்பட்டு மத்திய ஜவுளித் துறை அமைச்சராக அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அடுத்த பத்து நாட்களிலேயே அவரிடம் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக அவர்வசம் இருந்து ஒரு அமைச்சகம் பறிக்கப்பட்டுள்ளது.