கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் 104 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதாவை ஆட்சி அமைக்குமாறு கூறி கவர்னர் அழைப்பு விடுத்தார்.

Special Correspondent

மேலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதாவுக்கு 15 நாட்கள் காலஅவகாசம் வழங்கினார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள், கவர்னரின் முடிவை எதிர்த்து உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்க தடை விதிக்க மறுத்துவிட்டது.

இருந்த போதிலும், கர்நாடக சட்டசபையில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவேண்டும் என்று உத்தரவிட்டது.

இதன்படி, இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பாரதீய ஜனதா -காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என பரஸ்பரம் தெரிவித்து வருகின்றன.

கர்நாடகாவில் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ போபையாவை ஆளுநர் நியமித்துள்ளார். தற்காலிக சபாநாயகராக போபையாவை ஆளுநர் தேர்ந்தெடுத்ததற்கு காங்கிரஸ்-மஜத கூட்டணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது சிலமணி நேரத்திற்கு முன் உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுவின் மீதான விசாரணை காலை 10.30 மணிக்கு சிறப்பு அமர்வின் மூலம் விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் 17 சதவீதம் உள்ள, லிங்காயத்துகள் எப்போதுமே பாஜகவின் வாக்கு வங்கி. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் எம்.எல்.ஏ க்கள் சுமார் 20 பேர் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில், அவர்கள் ஆதரவை பாஜகவிற்கு பெற மத தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த எடியூரப்பா முன்பு முதல்வராக இருந்தபோது லிங்காயத்து மடங்கள் செய்து வரும் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்காக நிறையவே நன்கொடைகளை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், லிங்காயத்து சமூக எடியூரப்பாவுக்கே லிங்காயத்து எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் அல்லது லிங்காயத்து மக்களிடம் சொல்லி உங்களை புறக்கணிக்க அறிவுறுத்தப்படும் என மதத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

104 உறுப்பினர் பலம் மட்டுமே கொண்டுள்ள பாஜக, எப்படியாவது ஆட்சியை தக்க வைக்கåஇதுபோன்ற வழிகளையும் பின்பற்றுவதாக கூறப்படுகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவை அறிய கர்நாடகம் மட்டும் இல்லாது, நாடு முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள...