கர்நாடகா தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியாகியது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ்-மஜத இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இந்நிலையில் தாங்கள் தனிபெரும்பான்மை பெற்றுள்ளோம், எனவே தங்களையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா உரிமை கோரினார்.
இந்நிலையில் ஆளுநர் எடியூரப்பாவை இன்று பதவி ஏற்க அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரவு 1 மணியில் நடைபெற்ற விசாரணை விடிய விடிய நடைபெற்றது. இதனையடுத்து உச்சநீதிமன்ற எடியூரப்பா பதவி ஏற்க தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கின் விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் எடியூரப்பாவை அழைத்து ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கர்நாடக சட்டசபை வளாகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக 104 தொகுதியில் வென்றாலும் 29 தொகுதியில் டெபாசிட் இழந்து, 638621 ஓட்டுக்கள் காங்கிரஸை விட குறைவா வாங்கிய நிலையிலும் பாஜக ஆட்சி அமைக்க அழைத்தை ஆளுனரை கண்டித்த சித்தராமையாவுடன் அசோக் கெலாட், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்களும் தர்ணாவில் ஈடுபட்டதால் சட்டசபை வளாகம் முழுவதுமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இந்த பிரச்சனைகளுக்கு இடையில் தலைமைச்செயலகம் வந்து தனது பணிகளை துவங்கிய முதல் மந்திரி எடியூரப்பா, ரூ. 5 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யும் ஆணையில், தனது முதல் கையெழுத்திட்டார்.
இந்தநிலையில் அனந்த் குமார், எம்.பி. (பாஜக) கூறுகையில்,
கர்நாடகாவில் 3-வது முறையாக பதவி ஏற்ற எடியூரப்பா, பொறுப்பான அரசாங்கத்தையும், திறமையான நிர்வாகத்தையும், செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடாமல், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். காங்கிரஸ் ஒரு வயோதிபக் கட்சியாக இருப்பது சரியல்ல, இது துரதிர்ஷ்டமானது என்றார்