திமுக செயல்தலைவர் ஸ்டாலின், இளமையில் அப்போது தூர்தர்ஷனில் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளராக விளங்கிய பாத்திமா பாபுவை கடத்திச் சென்று மிரட்டினார் என்பதாக ஒரு வதந்தி பல்லாண்டுகளாக புழங்கி வந்தது. அந்த வதந்திகளுக்கு இதுவரையிலும் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இருந்தவரான பாத்திமா பாபு அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
‘என் வாழ்வில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஸ்டாலின் என்னைக் கடத்தியதாகச் சொல்லப்படும் அந்தக் காலகட்டத்தில் இது குறித்து நான் அப்போதைய குமுதம் இதழின் பத்திரிகையாளரான பால்யூவிற்கு விளக்கம் கொடுத்திருந்தேன். ஆனால், ஏனோ நான் சொன்ன விளக்கம் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை.
தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த சமயத்தில் ஒருமுறை நான் சித்திரப்பாவை எனும் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தேன். தூர்தர்ஷன் வழக்கப்படி சீரியல் முடியும் வரை எனக்கு செய்தி வாசிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அந்த இடைவெளியில் என்னைச் செய்தி வாசிப்பாளராகக் காண முடியாத காரணத்தால் இப்படி ஒரு வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். சித்திரப்பாவை தொடர் 13 வாரங்களில் முடிந்ததும் நான் மீண்டும் செய்தி வாசிப்பாளராகத் தொடர்ந்தேன். திருமணத்திற்கு முன்பே என் கணவரான பாபு தான் என்னை தூர்தர்ஷன் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதும், வீட்டுக்கு திரும்ப அழைத்துச் செல்வதுமாக இருந்தார்.
அப்படியிருக்கையில் இப்படி ஒரு வதந்தி எப்படி பரவியது, பரப்பப்பட்டது என்று எனக்குப் புரியவில்லை. நான் அப்போதும், இப்போதும் என்னை இவ்விஷயமாக விசாரிக்கும் எனது நண்பர்களுக்கு மேலே சொன்ன காரணத்தைத் தான் விளக்கமாக அளித்து வருகிறேன். அதை நம்புவதும், நம்பாததும் அவரவர் பாடு. ஆனால், இதன் காரணமாக ஒரு கட்சியின் செயல்தலைவராகப் பட்டவரின் கேரக்டரைக் கொலை செய்வது தவறு. நான் விளக்கம் அளித்த பிறகும் சிலர் அதே வதந்தியை உண்மை போலக் கூறி அவரது நற்பெயருக்குக் களங்க விளைவிப்பார்களானால் அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
என்னைப் பற்றி நான் சொல்வது தான் உண்மை, அதைத் தான் நீங்கள் நம்ப வேண்டும். அதை விட்டு விட்டு வெளியில் பலரும் கதை கட்டுவதைப் போல மசாலா தடவிய கற்பனைப் பொய்யைத்தான் நம்புவீர்கள் என்றால், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது உங்கள் இஷ்டம்’ இதற்கு மேல் இதைப் பற்றி கேள்வி வந்தால் நாம் பதில் சொல்வதாக இல்லை. என்று விளக்கம் அளித்திருக்கிறார் பாத்திமா பாபு.