ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. சுமார் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.

Special Correspondent

கர்நாடக தேர்தலை முன்னிட்டு நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலைகளை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் மாதம் 24ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகள் அன்றாடம் நிர்ணயிக்கும் முறை நிறுத்தப்பட்டிருந்தது.

இதற்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, விலையைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட முயற்சி என என்னென்னவோ சப்பைக் கட்டுகளை எண்ணெய் நிறுவனங்களும், பாஜக தலைவர்களும் மாறி மாறி பாடி வந்தார்கள். சரி உண்மையிலேயே நமது நலன் கருதித்தான் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட வில்லை என்றுகூட ஒரு சில பாமர மக்கள் நம்பவும் துணிந்துவிட்டார்கள்.

இவ்வளவு அக்கப்போருக்கும் இடையே, கடந்த சனிக்கிழமை கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து இனிதே முடிந்தது. ஒரு பக்கம், தேர்தல் முடிந்துவிட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிடுமோ என மக்கள் அச்சம் கொள்ள, இதற்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கும் போது, எப்படி உடனடியாக விலையை உயர்த்த முடியும் என்று பாமர மக்கள் நம்பிக்கையோடு இருந்தார்.

ஆனால், நாங்கள் சொல்வதெல்லாம் பொய்.. எங்களிடம் நிஜமே இல்லை.. என்ற பாணியில் தடாலடியாக இன்று பெட்ரோல், டீசல் விலைகள் வழக்கம் போல உயர்த்தப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 18 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.61 ஆகவும், டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து ரூ.69.79 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தலுக்காக, தினந்தோறும் விலை நிர்ணயிக்கும்முறை நிறுத்தப்படவில்லை என்றால், இன்று உயர்த்தப்பட்டதன் காரணம் என்ன என்று யார் பதில் சொல்லப் போகிறார்கள் என்றும்.,

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் அது சட்டவிரோதமல்லவா.. என சமூக தளத்திலே கோபமாக கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

தொடர் செய்திகள் : காவிரி நீர் குறைப்பு ஏமாற்றமளிக்கிறது தமிழக கட்சிகள் வேதனை