தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு இதுவரையிலும் மாணவர்களின் நேரடி பங்களிப்பில் நடைபெற்று வந்ததை திடீரென மாற்றி, 2018 பொறியியல் மாணவர் சேர்க்கை இணைய வழியாக நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததால், கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய, நடுத்தட்டு பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் பெரும் தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும் உள்ளானார்கள்.
ஆகவே, தி.மு.க. மாணவரணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரையின்படி, பொறியியல் சேர்க்கை நடைபெறும் சேவை மையங்களில் விண்ணப்ப கட்டணமாக டிமான்ட் டிராப்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இணைய வழி விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு முறையால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே, இந்த வழக்கை தி.மு.க. தொடுத்தது.
எனவே, இந்த நடவடிக்கை கிராமப்புற மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் கலந்தாய்வுடன், நேரடி கலந்தாய்வு முறையையும் கடைப்பிடிப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என மு.க ஸடாலின் கூறியுள்ளார்.
மேலும் விருதுநகரில் கவர்னரின் ஆய்விற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் " மாநில சுயாட்சி கொள்கைக்கும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையிலான அரசியல் சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமாக, ஏற்கனவே மேற்கொண்ட மாவட்ட ஆய்வுகளின் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடன் கவர்னர் ஆய்வு மேற்கொள்வதை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தும் முன்பாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில், திமுகவினரை கைது செய்வதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவர்னர் இதற்கு முன் ஆய்வுக்காக சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியபோது அமைதி காத்த தமிழக காவல்துறை, இப்போது விருதுநகர் மாவட்டத்திற்கு செல்லும்போது மட்டும் தி.மு.க.வினரை கைது செய்தது ஏன்? தமிழகத்தில் நடப்பது “போலீஸ் ராஜ்யம்” தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டவா? என காட்டமாக கேட்டுள்ளார்.