கே.எம். ஜோசப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்குமாறு மத்திய அரசிடம் மீண்டும் பரிந்துரைக்க கொலீஜியம் குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஒரு மனதாக அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ரத்தில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியபோதிலும், கொலீஜியம் குழு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் உறுதியாக இருப்பது இருதரப்புக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாட்டை வெளிச்சமிட்டு காட்டும் விதமாக அமைந்துள்ளது.,,
முன்னதாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் தில்லியில் நடைபெற்ற கொலீஜியம் குழுக் கூட்டத்தில், நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற அக்கூட்டத்தில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் ஜோசப்புக்கு பதவி உயர்வு வழங்க மீண்டும் பரிந்துரைப்பது என அனைத்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து கொலீஜியம் குழு வெளியிட்ட அறிக்கையில், புதிய நீதிபதிகள் பதவி உயர்வு தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளிக்கும்போது, ஜோசப்பின் பெயரும் சேர்த்து அனுப்பப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மேலும் விவாதிக்க வேண்டியிருப்பதால், வரும் 16-ஆம் தேதி மீண்டும் கொலீஜியம் குழு கூடவுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை 'கொலீஜியம்' குழுவே தன்னிச்சையாக நியமித்து வந்தது. அந்த நடைமுறைக்கு மாற்றாக, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய பாஜக அரசு முனைந்தது. அந்த நடவடிக்கை நீதித் துறைக்கும், நிர்வாகத் துறைக்கும் இடையே மோதலுக்கு வித்திட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு முன்னெடுத்த புதிய முயற்சி சட்டவிரோதமானது எனக் கூறி அதை ரத்து செய்தது. வேண்டுமானால் 'கொலீஜியம்' குழுவின் நியமன முறைகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்தது.
அதன்படி, புதிதாக நியமிக்கப்பட வேண்டிய நீதிபதிகளின் பெயர்களை 'கொலீஜியம்' பரிந்துரைக்கும். அவை, மத்திய அரசு மூலமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இறுதி செய்யப்படும்.
அந்த அடிப்படையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 'கொலீஜியம்' குழு அண்மையில் சில பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்தது.
மூத்த பெண் வழக்குரைஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என அதில் பரிந்துரைத்திருந்தது.
அதில் இந்து மல்ஹோத்ராவுக்கு இசைவு தெரிவித்த மத்திய அரசு, ஜோசப் தொடர்பான பரிந்துரையை மட்டும் நிராகரித்தது. இத்தகைய பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் கொலீஜியம் குழுவிடம் அரசு தெரிவித்தது. இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.
குறிப்பாக, உத்தரகண்டில் மத்திய அரசின் ஆலோசனையின்பேரில் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்தவர் நீதிபதி ஜோசப் என்பதால், அவரது பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாகக் கூறப்பட்டது.
இந்தச் சூழலில், தலைமை நீதிபதிக்கு செலமேஸ்வர் அண்மையில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ''கொலீஜியம் கூட்டத்தை மீண்டும் அவசரமாகக் கூட்டி, அதில் உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்புக்கு கே.எம்.ஜோசப்பை மீண்டும் பரிந்துரைக்க வேண்டும்; அந்த முடிவில் நான் உறுதியாக உள்ளேன்'' என்று குறிப்பிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே கொலீஜியம் குழுக் கூட்டத்தை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேறு வழியின்றி வெள்ளிக்கிழமை நடத்தியதாகத் தெரிகிறது.
பொதுவாக, கொலீஜியம் குழு இரண்டாவது முறையாக ஒருவரது பெயரை பரிந்துரைக்கும்பட்சத்தில் மத்திய அரசு அதை மறுதலிக்க முடியாது. மாறாக, அதை ஏற்றுக் கொண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்பது விதி. அத்தகைய நிர்பந்தத்தை அரசுக்கு அளிக்கும் விதமாகவே தற்போது கொலீஜியம் குழுவின் முடிவு அமைந்துள்ளது இது பாஜக அரசுக்கு பெரும் பின்ண்டைவாக கருதப்படுகிறது.