இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் சொத்து வாங்கியதை மறைத்ததாக கருப்பு பண சட்டத்தின்கீழ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Special Correspondent

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோரது பெயரில் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் நகரில் ஹோல்பன் குளோஸ் பார்டன் பகுதியில் ரூ.5.37 கோடிக்கு சொத்து வாங்கப்பட்டது. அதே பகுதியில் ரூ. 80 லட்சம் மதிப்பில் வேறு ஒரு சொத்தும் வாங்கப்பட்டது என்றும்,

மேலும், இவர்கள் பெயரில் அமெரிக்காவில் உள்ள நானோ ஹோல்டிங் நிறுவனத்தில் ரூ.3.28 கோடி முதலீடு செய்யப்பட்டது என்றும்,

இந்த கணக்கை வருமானவரிக் கணக்கு தாக்கலின்போது அவர்கள் காட்டவில்லை என இது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, வருமானவரித்துறை இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதையடுத்து, கருப்பு பண மோசடி சட்டப் பிரிவு 50ன் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஶ்ரீநிதி ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு வருமான வரித்துறை 3 பேருக்கும் 2017 ஆகஸ்ட் 4ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை எதிர்த்து நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 3 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்தறை விசாரணை நடத்தலாம்.

அதேநேரம், கருப்பு பண தடை சட்டத்தின் கீழோ அல்லது வருமானவரிச் சட்டத்தின் கீழோ நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும்போது, இந்த வழக்கு நிலுவையில் உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வழக்கில் வருமான வரித்துறை முதன்மை இயக்குனர் ஜூன் 5ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், கருப்பு பணம் தடுப்புச் சட்டம் பிரிவு 50ன் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஶ்ரீநிதி ஆகியோர் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கருப்பு பணம் தடுப்பு சட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களின் விபரங்களை மறைத்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 120 மடங்கு வரி அபராதம் விதிக்கப்படும். மேலும், 10 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கவும் இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சிதம்பரத்தின் குடும்பத்தினர் மீதான வழக்கில் வருமான வரித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.