சூரிய மண்டலத்தில் கோள்களுக்கு அப்பால் உள்ள கைப்பர் திணைமண்டலத்தில் (Kuiper Belt) கார்பன் அதிகம் உள்ள விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Special Correspondent

நெப்டியூன் கோளுக்கு அப்பால் இருக்கும் பனிக்கட்டிகளின் குவியலை வட்டமடித்துக்கொண்டிருக்கும் அந்த விண்கல், அந்தக் கோளில் இருந்து உருவாகவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுமார் 300 கிலோமீட்டர் அகலமுள்ள அந்த மாபெரும் விண்கல், சிறிய கோள்களான யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ அல்லாத வேறு கோள்களின் சுற்று வட்டப்பாதையில் இருந்து, நமது சூரிய மண்டலத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பிரிந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பூமியில் இருந்து நெடுந்தொலைவில் இருக்கும் அந்த விண்கல்லை ஆராய்ச்சி செய்யவே விஞ்ஞானிகளுக்கு பல ஆண்டுகள் ஆனது. "முதலில் அந்த விண்கல் குறித்த தரவுகளைப் பெற்றபோது, நாங்கள் தவறான தகவல்களையே பெற்றுள்ளோம் என்று கருதினோம். ஏனெனில் அது கைப்பர் திணைமண்டலத்தில் இருக்கும் ஒரு விண்கல்லைப் போல இல்லை," என்று அந்த ஆய்வில் பங்கேற்ற குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் டாம் செக்கல் பிபிசியிடம் தெரிவித்தார்.

கோள்களைக் கடந்து இருக்கும் சூரிய மண்டலத்தின் ஒரு பகுதியான கைப்பர் திணைமண்டலத்தில் இருக்கும் வின்கற்கள், தங்களின் மேற்பரப்பில் பனியால் அதிகம் மூடப்பட்டிருக்கும்

ஆனால், 2004 EW95 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் கார்பனை அதிக அளவில் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது பில்லோசிலிகேட்ஸ் (phyllosilicates) என்று கூறப்படும் தாதுக்களையும் கொண்டுள்ளது.

இந்த விண்கல்லில் திரவ வடிவில் நீர் இருந்ததால், அதன் பாறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன என்று கூறும் சக்கல், "2004 EW95 விண்கல் சூரியனில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ளது. அதன் வெப்ப நிலை மைனஸ் 235 டிகிரி செல்சியஸ். எனவே அதன் மேற்பரப்பில் பனி உறைந்த நிலையில் இருக்கும். இதற்கு முன்பு திரவ வடிவில் இருந்தது என்றால், அந்த விண்கல் முன்னொரு காலத்தில் சூரியனுக்கு அருகில் உருவாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதன் வெப்பம் அதிகமாக இருந்தது என்றும் தெரிய வருகிறது," என்கிறார்.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரியான் ஜோன்ஸ், "கைப்பர் திணைமண்டலத்தில் உள்ள ஒரு விண்கல்லில் பில்லோசிலிகேட்ஸ் தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை," என்று கூறுகிறார்.

சூரிய மண்டலம் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்கும் கோட்பாடுகளில் ஒன்றான 'கிராண்ட் டேக் அனுமானம்' (Grand tack hypothesis) தொடக்க காலத்தில் சூரிய மண்டலம் கொந்தளிப்பு மிகுந்த பிரதேசமாக இருந்ததாகக் கூறுகிறது. அப்போது வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் சூரியனுக்கு அருகில் நகர்ந்து சென்று, மீண்டும் தற்போது இருக்கும் சுற்றுவட்டப்பாதைகளில் நிலைபெற்றன என்றும், இந்த நிகழ்வுகளின்போது, விண்ணில் இருந்த பெரும் அளவிலான வாயுக்களால் உண்டான விண்கற்கள், சூரிய மண்டலத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கலாம். அதன்பின் அவை அந்த இடங்களிலேயே நிலைகொண்டிருக்கலாம். 2004 EW95 விண்கல் அந்த அனுமானதுடன் ஒத்துப்போகிறது என்றும், 2004 EW95 விண்கல் போலவே பல பொருட்கள் கைப்பர் திணைமண்டலத்தில் இருந்தாலும் அவை குறித்த போதிய தகவல்களை திரட்ட முடியவில்லை என்கிறார் செக்கல்.

நாசாவின் நியூ ஹாரிசான்ஸ் (New Horizons) ஆய்வுக் கலம் ஜனவரி 1, 2019 அன்று அல்டிமா தூல் (Ultima Thule) எனும் விண்கல்லை சென்றடையவுள்ளது.

அது சூரிய மண்டலத்துக்கு வெளியே அமைந்துள்ள விண் பொருட்கள் பற்றிய மேலும் தரவுகளை அறிய முடியும்.

தொடர் செய்திகள் : விண்கல் டிசி4 இன்று பூமியை கடப்பதால் பாதிப்பா