போளூர் அருகே குழந்தையை கடத்தியதாக மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்திமூர், தம்புகொட்டன்பாறை, கலையம் கிராமங்களை சேர்ந்த 20 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்திமூரில் குழந்தையை கடத்தியதாக மூதாட்டி கிராம மக்களால் நேற்று அடித்துக்கொலை செய்யப்பட்டார்
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அருகேயுள்ள அத்திமூர் கிராமத்தில் குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து காரில் கோயிலுக்கு வந்தவர்கள் மீது கிராம மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர்கள் மோகன் குமார் (43), சந்திரசேகர்(37). தற்போது மலேசியாவில் வசிக்கும் இந்த இருவர் உட்பட 5 பேர் குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக அத்திமூர் கிராமத்திற்கு வந்துள்ளனர். வந்த இடத்தில் மூதாட்டி ருக்மணி(65) அங்கிருந்த இரு குழந்தைகளுக்கு தன்னிடமிருந்த சாக்லேட்டுகளை கொடுத்துள்ளார்.
இதனை பார்த்து குழந்தை கடத்தும் கும்பல் என சந்தேகமடைந்த கிராம மக்களில் சிலர் மூதாட்டி ருக்மணியையும், அவருடன் வந்த 4 பேரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். கடுமையான தாக்குதலில் படுகாயமடைந்த ருக்மணி மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காரில் வந்தவர்களில் சிலரின் ஆடைகளை அவிழ்த்தெறிந்த கிராம மக்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் திருவண்ணாமலைஅருகே மூதாட்டியை அடித்து கொன்றதாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தம்புகொட்டன்பாறை, கலியம் கிராமங்களை சேர்ந்த 29க்கும் அதிகமானோர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
இன்று மாலைக்குள் 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தகவல் அளித்துள்ளனர். எஸ்.பி. பொன்னி தலைமையில் 7 குழுக்களாக 100 காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே போளூர் அருகே குழந்தையை கடத்தியதாக மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்திமூர், தம்புகொட்டன்பாறை,கலையம் கிராமங்களை சேர்ந்த 20 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீடியோ காட்சிகளை கொண்டு தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து ஊரைவிட்டு கிராம மக்கள் காலி செய்து வருகின்றனர். தம்பு கொட்டான் பாறை, அத்திமூர், களையம் பகுதி மக்கள் ஊரைவிட்டு காலி செய்தனர்.
இதனிடையே சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.