கடந்த 1991-96ம் ஆண்டுகளில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கில், அவரது தோழி சசிகலா, இளவரசி, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
ஓராண்டுக்கும் மேலாக நடந்து வந்த ஜெயலலிதா சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அபராதத்திற்கு ஈடாக சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய கோடநாடு எஸ்டேட் உள்பட பல சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஓராண்டாக தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தது.
தற்போது, சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
6 மாவட்டங்களில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துகள், உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஆய்வு செய்யப்பட்டு பறிமுதல் செய்வது குறித்து ஓரிரு நாளில் புதிய அரசாணை பிறப்பிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, மேலும் இருவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர்களுக்கு சொந்தமான 68 சொத்துக்களை தமிழக அரசு ஆய்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இந்த சொத்துக்கள் உள்ளன. தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் அந்த 6 மாவட்ட கலெக்டர்களுக்கு இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடிதம் எழுதியுள்ளனர்.
ஆனால் எந்த சட்டப்பிரிவின் கீழ் இவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழக அரசும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட சொத்துக்கள் இருப்பதாகவும், அந்த சொத்துக்கள் மீது எவ்வகை ஆய்வு நடத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக இரண்டு மாவட்ட கலெக்டர்கள் மத்திய தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டத்தின் நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து தமிழக அரசின் உயர்மட்டக்குழு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் மற்றும் மூத்த வக்கீல்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எந்த வகையில், அந்த சொத்துக்களை பறிமுதல் செய்து, அபராதத் தொகையை வசூலிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டத்தின் படி மட்டுமே சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும். வேறு எந்த சட்டப்பிரிவும் அதற்காக இல்லை என்று அரசு வக்கீல்கள் தெரிவித்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தொடர்புடைய மூத்த அதிகாரி ஒருவரின் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டத்தின் நடைமுறைகளை பின்பற்றலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், லெக்ஸ் பிராபர்ட்டி டெவலப்மென்ட் பிரைவேட் லிமிடெட், மேடவ் அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைசஸ் லிமிடெட், ரிவர்வே அக்ரோ பிராக்டக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் இந்தோ, தோகா கெமிக்கல்ஸ் அன்ட் பார்மசூட்டிக்கல்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
மேலும், நீதிமன்றம் இந்த அபராத தொகையை கட்டுவதற்காக சில சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதித்துள்ளதாகவும், சிறப்பு நீதிமன்றத்தை நடத்தியதற்காக கர்நாடக அரசுக்கு ₹5கோடி செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் அசையா சொத்துக்களை விற்பனை செய்வது அல்லது ரிசர்வ் வங்கியில் உள்ள தங்க நகை மற்றும் விலையுயர்ந்த பொருட்களை விற்பனை செய்வது என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.
மேலும், குறிப்பிட்ட 68 சொத்துக்களின் சொத்துரிமையை தமிழக அரசுக்கு மாற்றுவதன் மூலம் வருவாய் துறை அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்ய முடியும். ஆய்வு செய்யும் பணி முடிவடைந்தால் சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் படி அவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்து சேரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, அடையாளம் காணப்பட்ட 68சொத்துக்களை உடனடியாக ஆய்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்ததும் சொத்துக்களை பறிமுதல் செய்து, விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய அரசாணை பிறப்பிக்கவும் தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான சட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. ஓரிரு நாளில் இதற்கான சட்ட அரசாணைகள் பிறப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.