இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வினாக்கள் கடுமையாக இருந்தால், நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தொழில்நுட்ப நிபுணர் ராம்பிராச் கூறி உள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில் கடந்த 6ம் தேதி நாடு முழுவதும் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் நீட் தேர்வில் கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 49 கேள்விகள் தவறானது என்று ராம்பிராச் குற்றம் சாட்டியுள்ளார். கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தவறாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு அதற்கு தகுந்த அளவில் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும் ராம்பிராச் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறிய ராம்பிராச், வரும் தேர்வுகளில் சிபிஎஸ் புத்தகங்களை தமிழில் மொழிப்பெயர்த்து அதிலிருந்து கேள்விகள் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தொழில்நுட்ப நிபுணரான ராம்பிராச், நீட் தேர்வு பயிற்சி செயலியை அறிமுகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீட் தேர்வு தமிழக மாணவர்களை மனநோயாளிகளாக மாற்ற நடத்தப்பட்டதா என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. ஆத்தாடி தெய்வக்குத்தம் என்ற பெயரில் நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழில் கவிதை ஒன்று வெளியாகியுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவருக்கும், மாநில அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவருக்கும் இடையில் நடைபெறும் உரையாடலை போல அந்த கவிதை அமைந்துள்ளது. அதில் நெல் எடுத்து நீ வரனும், உமி கொண்டு நான் வருவேன். நீட் எனும் தட்டிலிட்டு இருவரும் ஊதி ஊதி சாப்பிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை சாப்பிடுவதற்கு முன்பாக இருவருக்கும் ஒரு பரீட்சை உண்டு எனவும், நீ படித்த பாடத்தை விட்டுவிட்டு நான் படித்த பாடத்தில் நீட்-டா இருவரும் தேர்வெழுதனும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று தமிழக மாணவர்கள் கேட்டால் அது தெய்வக்குத்தத்தை விடவும் மேலான உச்சநீதிமன்ற குத்தம் ஆகிவிடும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. நாங்கள் எங்கள் ஊரில் தேர்வெழுதுவோம், நீ உங்கள் ஊரை தவிர்த்து ராஜஸ்தான், கேரளா, சிக்கிமில் போய் தேர்வெழுதி, உதவிக்கு அழைத்துச் சென்ற தந்தையின் உயிரையும் இழக்க வேண்டும் என்றும் அந்த கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியாக இவ்வளவு நாணயமா நடுவுநிலையோட நடத்தப்படும் நீட் தேர்வு எங்களை மருத்துவர்களாக்கவா? இல்லை மனநோயாளிகளாக மாற்றவா? என தமிழக மாணவர்கள் கேள்வி கேட்பது போல அந்த கவிதை தொகுப்பு முடிகிறது.
மேலும் படிக்க :நீட் குளறுபடி : சி.பி.எஸ்.இ, தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.