கர்நாடக மாநிலத்தின் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால் காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது என உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, காவிரி மேலாண்மை விஷயத்தில் தனது நிலையை மாற்றி கொண்ட மத்திய அரசை பற்றி எதுவுமே சொல்லாமல் காவிரியில் இருந்து கர்நாடக அரசு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை செயல்படுத்த இயலாது என்று அப்போதே கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிமன்றம், விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.
காவிரி வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் கர்நாடக அரசு இன்று விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அதில், கடந்த பருவ மழை காலத்தில், கர்நாடக மாநிலத்துக்கு மழை பற்றாக்குறையால் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் வரை காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 116.74 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
வறட்சி காலத்தில் வழங்கப்பட்டதை விட தற்போது 16.66 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டிய அவசியம் இல்லை என்றும், தற்போது கர்நாடகத்தின் தேவைக்கு மட்டுமே காவிரியில் தண்ணீர் இருப்பதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட இயலாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.