மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. தமிழக மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில், திருத்துறைப்பூண்டியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

Special Correspondent

இதன்படி, கிருஷ்ணசாமி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் எர்ணாகுளம் சென்றார். இன்று காலை 10 மணிக்கு நீட் தேர்வு தொடங்கியதால், கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுத மையத்திற்கு சென்றார். மகனை தேர்வு மையத்திற்குள் அனுப்பி விட்டு விடுதியில் காத்திருந்தபோது திருத்துறைப்பூண்டி விளக்குடியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதினார்.

மகனை தேர்வு எழுத அழைத்துச்சென்ற இடத்தில் தந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க ஸ்டாலின், மாணவர் கஸ்துரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும், ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த துயர சம்பவத்தை அடுத்து மதுரையில் உள்ள தனியார் கல்லூரிக்கு நீட் தேர்வு எழுத அழைத்து சென்ற மகளை மீண்டும் கூட்டி செல்லும் போது கண்ணன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நீட் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மகள் தேவி ஐஸ்வர்யாவிடம் நெஞ்சுவலிப்பதாக கண்ணன் கூறியுள்ளார். பின்னர் கண்ணன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னா் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலே உயிரிழந்தார். உயிரிழந்த கண்ணன் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கம்புணரியை சேர்ந்தவா் என்பது கூறிப்பிடதக்கது.