பப்புவா நியூ கினியா தீவுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியா தீவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராபால் நகருக்கு அருகில் உள்ள நியூ பிரிட்டன் தீவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Special Correspondent

இதனையடுத்து நிலநடுக்கத்தின் மையப்புள்ளியில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைப்பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அலைகள் வழக்கத்தை விட சுமார் ஒரு மீட்டர் வரை அதிகமாக மேலெழும்ப வாய்ப்புள்ளதாகவும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சேத விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. இதனையடுத்து பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளின் கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 29 மார்ச் அன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவுகோலில் இதே இடத்தில் பதிவாகி பலத்த சேதம் எற்பட்டது குறிப்பிடதக்கது.