பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மற்றவர்களை குறை சொல்லாமல், ஒரு கேப்டனாக தானே அனைத்திற்கும் பொறுப்பேற்று கொள்வதாக ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் விட்டு அழுதபடி பேட்டியளித்தார்.

Special Correspondent

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் மூன்றாவது போட்டியின் போது, ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் கேமிரான் பெனிகிராப்ட் பந்தை சேதப்படுத்தியது வீடியோல் தெளிவாக பதிவாகி கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தான் பந்தை சேதப்படுத்தியது ஆஸ்திரேலிய அணியின் லீடர்சிப்பிற்கு தெரியும், அவர்களுக்கு தெரிந்து தான் செய்தேன் என்று பெனிகிராப்ட் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பேசினார், இதனை ஸ்டீவ் ஸ்மித்தும் ஒப்புக்கொண்டார், மேலும் இது போன்ற தவறு இனி நடக்காது என்றும் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து விசாரித்த கிரிக்கெட் ஆஸ்திரேலிய குழு, பந்தை சேதப்படுத்த திட்டம் போட்டுக்கொடுத்த ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு தடைவிதித்தது. பேன்கிராப்ட்டுக்கு 9 மாதம் தடைவிதித்தது. மேலும் குற்றச்சாட்டிற்கு ஆளான மூன்று வீரர்களும் உடனடியாக தென் ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறி நாடு திருமப வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை தொடர்ந்து மூன்று வீரர்களும் நாடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று சிட்னி திரும்பிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது கண்ணீருடன் அவர் கூறுகையில்,’என் சக வீரர்களுக்கும், உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும், ஏமாற்றமும் கோவமும் அடைந்துள்ள ஆஸ்திரேலியர்களுக்கும் என்னை மன்னித்துவிடுங்கள். ஆஸ்திரேலிய கேப்டனாக முழுபொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன். தலைவனாக நான் தோற்றுவிட்டேன்.

தவறான முடிவை எடுத்துவிட்டேன். அதற்கான பலனை தற்போது அனுபவித்துவிட்டேன். எனது தவறை முடிந்த அளவு மறைக்க முயன்றேன். இதில் இருந்து நல்ல பாடம் கற்றுக்கொண்டேன். இது மற்ற வீரர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமையட்டும். ஒரு நல்ல மாற்றத்துக்கு நான் காரணமாக இருப்பேன். இதை என் வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன். கிரிக்கெட் தான் என் வாழ்க்கை. அதை மீண்டும் அடைவேன் என நம்புகிறேன்.’ என்றார்.