கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடப்பதாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தச் சென்ற எம்.எல்.ஏ-க்கள், இணை பதிவாளரை ஒருமையில் திட்டியிருக்கிறார்கள். இதுகுறித்து இணை பதிவாளர் நடுக்காட்டு ராஜா போலீஸில் புகார் அளிக்கச் சென்றதால் பரபரப்பு நிலவுகிறது.

Special Correspondent

அதமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 26-ம் தேதி வரை நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 114 சங்கங்களுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

அதற்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று மாலை 5 மணிக்கு அந்தந்த கூட்டுறவு சங்க அலுவலகங்களில் ஒட்டியிருக்க வேண்டும். ஆனாலும் பெரும்பாலான கூட்டுறவு சங்கங்களில் நேற்று மாலை 5 மணிக்கு வேட்பாளர் இறுதிப் பட்டியல் ஒட்டப்படவில்லை. அதிலும் அனைத்து சங்கங்களிலும் உள்ள மனுக்களையும் இணை பதிவாளர் அலுவலகங்களுக்கு எடுத்து சென்றதாகவும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், குமரி மாவட்டத்தின் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார் என ஆறு எம்.எல்.ஏ.க்களும் இன்று (2.3.2018) காலை சுமார் 11 மணியளவில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றனர்.

அவர்களுடன் கட்சித் தொண்டர்களும் வந்தனர். இணை பதிவாளர் நடுக்காட்டு ராஜா அறைக்குள் 6 எம்.எல்.ஏ-க்களும் நுழைந்தனர். அப்போது இணை பதிவாளர் இருக்கையில் அமர்ந்திருந்தார். இதனால் கோபமான எம்.எல்.ஏ-க்கள், "நாங்கள் ஆறு எம்.எல்.ஏ-க்கள் வந்த பிறகும் சீட்டிலிருந்து எழுந்து மரியாதை கொடுக்க வேண்டும் எனத் தெரியாதா. நீ எப்போதும் இப்படித்தான் மக்கள் பிரதிநிதிகள் வந்தால் மரியாதை தருவதில்லை. . முதலில் சீட்டிலிருந்து எழும்பு" என ஆவேசமானார்கள்.

அப்போது பிரின்ஸ் எம்.எல்.ஏ. இணை பதிவாளர் முன் நின்று சத்தம் போட்டார். . அப்போது அருகில் நின்றிருந்த கூட்டுறவுத்துறை ஜூனியர் அஜிஸ்டெண்ட் சுபாஷ்,"அவர் கூட்டுறவு சங்கத் தேர்தல் பார்வையாளர். அவரை ஆபாசமாகப் பேசாதீங்க" என்றார். உடனே எம்.எல்.ஏ-க்கள் அவரிடம் மல்லுக்கட்டினர்.

உடன் வந்திருந்த தொண்டர்கள் சுபாஷைப் பிடித்து இழுத்து வெளியேற்றினர். சிலர் அவரைத் தாக்கியிருக்கிறார்கள். அவர் இப்போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதற்கிடையில் டி.எஸ்.பி கோபி தலைமையில் இணை பதிவாளர் அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டது.

நிலைமையைப் புரிந்துகொண்ட கூடுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நடுக்காட்டு ராஜா இருக்கையிலிருந்து எழுந்து நின்று, "நீங்கள் கூட்டமாக வருவதைப் பார்த்ததும் என்னவென்று புரியாமல் இருக்கையில் அமர்ந்துவிட்டேன். அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

பின்னர், சற்று கூலான எம்.எல்.ஏ-க்கள், "கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 5 மணிக்கு லிஸ்ட் போடாமல் இருந்த எலக்‌ஷன் ஆப்பீஸர்களை சஸ்பெண்ட் பண்ண வேண்டும்.

வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி செய்தவர்களை அழைத்து அதற்கான காரணங்களைக் கூற வேண்டும். பல இடங்களில் வேட்புமனுத்தாக்கல் செய்ய விடவில்லை.

அவர்களுக்கு திரும்பவும் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும். தள்ளுபடிக்கான காரணத்தை எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும். மொத்தத்தில் இந்த முதல்கட்ட தேர்தலை ரத்து செய்துவிட்டு திரும்பவும் வேட்புமனுக்கள் பெற்று தேர்தல் நடத்த வேண்டும்" என்றனர்.

அதற்கு இணை பதிவாளரோ, "இனிமேல் முறைகேடு நடந்தால் என்னிடம் கேளுங்கள்" என்றார். ஆனாலும், சமாதானம் அடையாத எம்.எல்.ஏ-க்கள் வேட்புமனுக்களை டி.ஆர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றவர்களையும், வேட்பாளர்கள் பட்டியலை நேற்று மாலை 5 மணிக்குள் ஒட்டாதவர்களையும் சஸ்பெண்ட் செய்வதுடன், முதற்கட்டமாக நடந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுபடியும் நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பு கொடுத்தால்தான் இங்கிருந்து புறப்படுவோம்" என்றனர்.

மதியம் வரை எம்.எல்.ஏ-க்களுக்கும் இணை பதிவாளருக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டே இருந்தது. இதற்கிடையில் நாகர்கோவில் துணை பதிவாளரிடம் வேட்பாளர்கள் லிஸ்ட் ஒட்டாதவர்கள் குறித்து எழுத்துபூர்வமாகக் கொடுக்கும்படி இணை பதிவாளர் கூறினார்.

இதற்கிடையில் நடுக்காட்டு ராஜாவின் மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதைப் படித்தவர் திடீரென அலுவலக அறையைவிட்டு வெளியேறினார். அப்போது போலீஸார் அவருக்கு பாதுகாப்புக் கொடுத்தனர். அலுவலகத்துக்கு வெளியே வந்தவர், போலீஸ் வாகனத்தில் ஏறி நேசமணி நகர் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கு அவர் புகார் அளித்துக்கொண்டிருப்பதாகப் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதை அறிந்த பிரின்ஸ் எம்.எல்.ஏ, `உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை’ எனக் கூறியபடி இணை பதிவாளர் அலுவலகத்திலிருந்து வெளியேறினார். மீதமுள்ள 5 எம்.எல்.ஏ-க்களும் இப்போதும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தன் வேலையை இணை பதிவாளர் நடுக்காட்டு ராஜா ஒழுங்கா செய்து இருந்தால் எம்.எல்.ஏக்கள் அங்கே வர வேண்டிய அவசியமே இருந்து இருக்காது என்றும் ., அவர்கள் 6 பேர் வந்தும் மரியாதை தர மறுத்த நபரிடம் எம்.எல்.ஏக்கள் மரியாதை வேண்டி வார்த்தையை விட்டு இருக்க வேண்டாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிததனர்.