12ஆம் வகுப்பு பொருளியல் மற்றும் 10 ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்து உள்ளது.
மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் பிளஸ்-2, பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இரண்டு வகுப்புகளுக்கான தேர்வுகளும், கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மார்ச் 26, பிளஸ்-2 வகுப்புகான பொருளியல் பாடம் தேர்வு நடைபெற்றது.
ஆனால், இந்த தேர்வு நடைபெறும் முன்னரே, வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியானது. சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் வினாத்தாள் வெளியானதாக தகவல் பரவியது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த தகவலை சிபிஎஸ்இ மறுத்து இருந்தது.
அதேபோல், இன்று (28.03.2018) பத்தாம் வகுப்புக்கான கணக்கு தேர்வு நடைபெற்றது. கணக்கு தேர்வுக்கான வினாத்தாளும் வாட்ஸ் அப்பில் கசிந்ததாக தகவல் பரவியது. இந்த தகவல் காட்டுத்தீ போல் நாடு முழுவதும் பரவியதையடுத்து மாணவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு கணக்கு மற்றும் 12 ஆம் வகுப்பு பொருளியல் ஆகிய பாடங்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக எழுந்த புகாரையடுத்து மறு தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ் இ தெரிவித்து உள்ளது.
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி சிபிஎஸ்இ, பிளஸ்-2 தேர்வுகளும், ஏப்ரல் 4 ஆம் தேதி பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் முடிவடைகின்றன.
தேர்வு ஒழுங்க நடத்த தெரியாமல் சிபிஎஸ்இ முடிவால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். சிலர் கோபமாக தவறு செய்த நபர்கள் மீது என்ன நடவடிக்கை என்றும் கேட்டு வருகிறார்கள்...