பால தண்டாயுத பாணி கோயிலுக்கு சில ஆண்டுகளுக்கு முன் உற்சவர் சிலை செய்யப்பட்டது. அதற்கு வெளியிலிருந்து நன்கொடை பெறக்கூடாது என விதி உள்ளது. ஆனால் திருவண்ணாமலை கோயில் மற்றும் பொதுமக்களிடம் நன்கொடை பெற்று சிலை செய்யப்பட்டது.
22 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சிலையில் 10 சதவீதம் கூட தங்கம் இல்லை எனவும், ஐம்பொன்னால் சிலை செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
உற்சவர் சிலைக்காக பழனி கோயிலில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், தலைமை ஸ்தபதி முத்தையா, கோயிலின் முன்னாள் செயல் அலுவலர் கே.கே.ராஜா ஆகியோர் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதற்கு உபயதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்தைக் கலக்கவில்லை எனவும், தங்கம் வசூல் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாகவும் தொடரப்பட்ட வழக்கு விறுவிறுப்பாக நடந்தது.
அதில் சிலை மோசடியில் தமிழக தலைமை ஸ்பதி முத்தையாவுக்கும் தொடர்பு இருப்பதாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. இந்த நிலையில் முத்தையா ஸ்தபதி கைதாவதிலிருந்து தவிர்ப்பதற்காக முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். “தன்மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் தேவைப்பட்டால் நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருக்கிறேன்'' என முத்தையா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
மேலும், தான் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். பிறகு, நீதிபதி மகாதேவன், சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேலின் விசாரணைக்கு 10 நாள்கள் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சியில் உள்ள சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேலின் விசாரணைக்கு முத்தையா ஆஜரானார். இதைத் தொடர்ந்து முத்தையாவுக்கு நிபந்தனைகளுடன்கூடிய ஜாமீனை உயர் நீதிமன்றம் வழங்கியது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலை வழக்கில் ஜாமினில் வந்தவர் பழநி பால தண்டாயுதபாணி உற்சவர் சிலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். இந்த ஸ்தபதி முத்தையா பத்மஸ்ரீ விருதுபெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது