காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த காலக் கெடு 29ம் தேதியுடன், முடிய உள்ள நிலையில், மத்திய அரசு இதுவரை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.

Special Correspondent

இதையடுத்து, பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தமிழக விவசாயிகள் 100 பேர் டெல்லி சென்றுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு தமிழக விவசாயிகள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

பிரதான் எதிர்கட்சி திமுகவும் தனது மண்டல மாநாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் தவிர வேறு எந்த அமைப்பையும் ஏற்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளது

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக மண்டல மாநாட்டில் காவிரி பிரச்னை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Special Correspondent

இத்தீர்மானத்தை முன்மொழிந்து கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

காவிரி நதிநீர்ப் பிரச்னையில் மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக வேறு எந்த அமைப்பையும் ஏற்கமாட்டோம். பதவியில் நீடிப்பதற்கு கைமாறாக மத்திய அரசிடம் அதிமுக அரசு மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்.

தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்னையான காவிரி நதிநீர் உரிமைக்காகத் திமுக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கருணாநிதி முதல்வராகவும், வி.பி.சிங் பிரதமராகவும் இருந்தபோதுதான், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி நடுவர் மன்றத்தை மத்தியஅரசு அமைத்தது.

நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகியவை கிடைப்பதற்கு திமுக தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபட்டதுடன் அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை மேம்படுத்தி காவிரி டெல்டா விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிவிடாதபடி காவிரி நீர் கிடைப்பதற்கு தொடர்ந்து ஆவன செய்தது.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தெரிவித்துள்ளபடி காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்றும் குழுவும் உருவாக்கப்படுவது கட்டாயம் எனக்கூறி அதற்கு காலக்கெடுவும் விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

அந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் துச்சம் என மதித்து தமிழ்நாட்டை மேலும் வஞ்சித்திடும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அதிமுக அரசு மத்திய ஆட்சியாளர்களுக்கு தீவிரமான அரசியல் அழுத்தம் கொடுத்து மேலாண்மை வாரியம் அமைக்க ஆவன செய்ய வேண்டும்.

இப்பிரச்னையில் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மாநில அரசுக்கு திமுக முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பொருட்படுத்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற குழுவை அமைக்க மத்திய அரசின் நீர்வளத் துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பது தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை பறிக்கும் செயலாகும். கர்நாடகத் தேர்தலை கணக்கில் கொண்டு குறுகிய நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. இந்த துரோகத்தை அதிமுக அரசு தைரியமாக எதிர்த்து நின்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சமாதானமற்ற அழுத்தமான உறுதி காட்ட வேண்டும்.

மாநில உரிமைகளைத் தொடர்ந்து பறிகொடுத்து வரும் அதிமுக அரசு தமிழ்நாட்டின் உயிர் ஆதாரப் பிரச்னையான காவிரி விவகாரத்திலும் நமது உரிமைகளை விட்டுக் கொடுத்தால் விவசாயிகளையும், பொதுமக்களையும் திரட்டி திமுக போராட்டக் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றார் ஸ்டாலின்.