ஈரோடு மண்டல திமுக., மாநாடு நேற்று ஈரோடு பெருந்துறை சரளையில் துவங்கியது. மாநாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணாநகர், தந்தை பெரியார் திடலில் நேற்று முதல்நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக துவங்கியது.
நேற்று கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த திமுகவினர் லட்சக்கணக்கில் திரண்டனர். மாநாட்டையொட்டி மைசூர் அரண்மனையை போன்று பிரமாண்டமான முகப்பும், உட்புறம் இரண்டாவது முகப்பும் கட்சியினரை மட்டுமின்றி பார்வையாளர்களையும், பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வாகனங்களை நிறுத்துவதற்கு மட்டும் 400 ஏக்கர் நிலத்தில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது. இதுதவிர மக்களுக்கு கழிப்பிட வசதியும் செய்யப்பட்டிருந்தது.
நேற்று கட்சியினர் பலரும் குடும்பம், குடும்பமாக மாநாட்டிற்கு வருகை தந்து இரவு மாநாட்டு பந்தலிலேயே தங்கி, இரண்டாம் நாளான இன்றும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
நேற்று காலை மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் திமுக முன்னணியினர் பேசினர். இன்று காலை 9 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் துவங்கின. காலை 10 மணிக்கு பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள், முக்கிய திமுக பிரமுகர்கள் நிர்வாகிகள் பேசினர். இந்நிலையில், மதியம் 12 மணியளவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான சிறப்பு தீர்மானத்தை முன்மொழிந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரி நதிநீர் உரிமைக்காகத் திமுக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. தலைவர் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராகவும், வி.பி.சிங் பிரதமராகவும் இருந்தபோது தான், கருணாநிதி வலியுறுத்தலை ஏற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது.
நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகியவை கிடைப்பதற்கு திமுகவின் தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபட்டதுடன், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை மேம்படுத்தி, காவிரி டெல்டா விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிவிடாதபடி, காவிரி நீர் கிடைப்பதற்கும் தொடர்ந்து ஆவன செய்தது.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தெரிவித்துள்ளபடி காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் உருவாக்கப்படுவது கட்டாயம் எனக் காலக்கெடுவும் விதித்துள்ளது உச்சநீதிமன்றம். அந்த தீர்ப்பை துச்சமென மதித்து, தமிழ்நாட்டை மேலும் வஞ்சித்திடும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், ஏதேதோ சொல்லிக் காலம் தாழ்த்திவருகிறது மத்திய அரசு.
தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அதிமுக தலைமையிலான மைனாரிட்டி அரசு, மத்திய ஆட்சியாளர்களுக்குத் தீவிரமான அரசியல் அழுத்தம் கொடுத்து ,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், இப்பிரச்சினையில் அரசியல் கருத்துவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு திமுக, மாநில அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி வருகிறது.
தலைவர் கருணாநிதி முதல்வராகவும், பாஜவின் மூத்த தலைவர் வாஜ்பாய் பிரதமராகவும் இருந்தபோது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், காவிரி நதி நீர் ஆணையம் என்கிற அமைப்பு பிரதமர் தலைமையில் உருவாக்கப்பட்டபோது, அதனைப் பல் இல்லாத ஆணையம்’ என கேலியும் கிண்டலும் செய்தவர் அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா என்பதை காவிரி தீரத்து விவசாயப் பெருமக்கள் மறந்துவிடவில்லை.
இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பையும் சிறிதும் பொருட்படுத்தாமல், காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதில், 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற குழுவை அமைக்க மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பது, தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை முற்றிலுமாகப் பறித்து முறித்துப் போடுகின்ற பகிரங்கமான எதிர்மறைச் செயலாகும்.
ஆகையால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் திமுக விவசாயிகளை திரட்டி போராடும் என்றும் ஸ்டாலின் பேசினார்...