தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பென்க்ராஃப்ட் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பந்தினை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளனர். இவ்விவகாரம் கிரிக்கெட் உலகில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வரை நடைபெற்றுள்ள போட்டிகளில் இந்த தொடர் மிகவும் சர்ச்சைக்குரியதாகவே அமைந்துள்ளது. முன்னதாக, இரு அணி வீரர்களும் ஓய்வு அறையில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட மோதல் போக்குகளை கடைபிடித்து வருகின்றனர்.
இதனால் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவுக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டு, பின்னர் மேல்முறையீடு செய்து அந்த தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். குறிப்பாக ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னரின் செயல்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், பந்து சேதப்படுத்திய விவகாரம் விடியோ மற்றும் புகைப்படப் பதிவுகளில் வெளிச்சமானதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், பென்க்ராஃப்ட் உள்ளிட்டோர் மன்னிப்பு கோரியுள்ளனர். ஆனால், இதற்கு பலதரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே இவ்விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரணையை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜேம்ஸ் சதர்லான்ட் கூறியதாவது:
இச்சம்பவம் எங்களுக்கு மிகவும் மனவருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் நாங்கள் உடனடியாக எங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். தற்போது எங்களிடம் போதிய ஆதாராமில்லாத நிலையில், சிலர் அங்கு சென்று அதனை சேகரிக்கச் சென்றுள்ளனர். அப்போது அங்குள்ளவர்களிடம் நடந்த சம்பவங்கள் தொடர்பாகவும் விசாரிக்கவுள்ளனர். இவை அனைத்தும் நடந்த பின்னர் இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ஆட்டத்தின் மத்தியில் உள்ளதால் அது முடியும் வரை காத்திருப்போம். நான் இன்னும் ஸ்டீவ் ஸ்மித்திடம் இதுகுறித்து பேசவில்லை என்றார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து இந்த தொடரின் மீதமிருக்கும் போட்டிகளில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் இடைக்கால கேப்டனாக டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் முதலே அவர் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.