ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதால் அந்த ஆலையின் விரிவாக்கத்திற்கு தடை கோரி தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த மக்கள் பங்கேற்றனர்.

Special Correspondent

இந்தப் போராட்டத்தில் பங்குபெறுவது பொதுமக்களின் கடமை என்றும், தன்னை அழைத்தால் வருவதாக கமல் ஹாசன் கூறியுள்ளார்.

கமலின் கருத்துக்களை வரவேற்ற, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவையைச் சேர்ந்த ராஜா சொர்ணவேல்பாண்டியன் ''கட்சியின் அடையாளத்துடன் கமல் வரக்கூடாது. தமிழன் என்ற உணர்வுடன் அவர் வரவேண்டும். நாங்கள் கூப்பிட்டுத்தான் வரவேண்டும் என்பதில்லை. அவராகவே சொந்த விருப்பத்தில் வருவதுதான் சிறந்தது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க தமிழன் என்ற அடையாளம் போதும் என்று எண்ணுகிறோம்,'' என்றார்.

போரட்டக்குழுவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் பாத்திமா பாபு தற்போது இயங்கிவரும் ஆலை, நீர், காற்று என இயற்கையை மாசுபடுத்தி, சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த ஆலையை மேலும் விரிவாக்கம் செய்வதை அனுமதிக்கக்கூடாது என ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் குடியிருப்பு பகுதியில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் தள்ளியே தொழிற்சாலை அமையவேண்டும் என்ற விதிகளை மீறி, ஸ்டெர்லைட் ஆலை, குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தியதற்காகவும், 1997-2012ம் ஆண்டு காலத்தில் சில ஆண்டுகள் முறையான அரசு ஒப்புதல்களை புதுப்பிக்காமலும் ஆலையை நடத்தியதற்காகவும் ஸ்டெர்லைட் ஆலை நூறு கோடியை ரூபாயை தண்டமாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பதையும், தாமிர ஆலையின் மாசுபாட்டால் விவசாய நிலங்களும் வீணாகியுள்ளன என்றும் போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர்.

பல குழந்தைகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி அவர்களின் பெற்றோர்களுடன் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதுவரை இல்லாத அளவு பல்லாயிரம் மக்கள் போராட்டத்தில் குடும்பத்துடம் கலந்துக் கொண்டது இதுவே முதல் முறை என போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அனுமதி பெற்று இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகக் கூறுகிறார் போராட்ட ஒருங்கிணைப்பாளரான ராஜா.

''போரட்டத்திற்கு பலமுறை அனுமதி கேட்டபோது, அனுமதி அளிக்கப்படவில்லை என்பதால், நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்றோம். ஆயிரக்கணக்கான ஊர் மக்கள், பெண்கள், குழந்தைகள், வணிகர்கள் என பலரும் கலந்துகொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். மக்களின் எதிர்ப்பைக் கவனத்தில் கொண்டு மத்திய அரசும் மாநில அரசும் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதிக்கவேண்டும்”, என்று அவர் கூறினார்.

ஆலையின் சுற்றுச்சுவருக்கு அருகில் அமைந்துள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நாற்பது நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்திவருவதாக கூறிய ராஜா, ''தாமிர ஆலையின் மாசுபாட்டால், நூற்றுக்கணக்கான மக்கள் நோய்வாய்ப்பட்டு உள்ளனர்.

தற்போது விரிவாக்கம் என்ற பெயரில் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் தாமிர ஆலை செயல்படவுள்ளது என்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.

ஆபத்தான ரசாயனங்கள் பயன்படுத்தப்படும் இந்த ஆலையை, குடியிருப்புப் பகுதிக்கு அருகில் செயல்பட எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பதை மீண்டும் விசாரிக்கவேண்டும்,'' என்று கூறினார்.

தூத்துக்குடி மக்கள் பலர் ஒன்று சேர்ந்து நடத்திய போராட்டத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள மக்கள் தொடர்பு அதிகாரி எம். இசக்கியப்பன், ஆலையின் விரிவாக்கத்திற்கு தேவையான எல்லா அனுமதிகளையும் அரசாங்கத்திடம் பெற்றுள்ளதாக தனது அறிக்கையில் கூறுகிறார்.

''உலகின் மிகப்பெரிய தாமிர உருக்காலை சீனாவில் உள்ளது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு பின்னர், உலகின் இரண்டாவது பெரிய உருக்காலையாக இந்த ஆலை செயல்படும். ஆலையை எதிர்ப்பவர்கள், தற்போது ஆலையின் உற்பத்தி அளவை விட நான்கு மடங்கு அதிகப்படுத்தவுள்ளதாக கூறுகிறார்கள்.

உண்மையில் தற்போது செயல்படும் அளவின் ஒரு பங்கை மட்டுமே நாங்கள் கூட்டவுள்ளோம். எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு கேடுவிளைவிக்கும் வண்ணம் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்,'' என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

''ஆலையின் கழிவுகள் எந்த விதத்திலும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் நீடித்த பயன்பாட்டிற்கு எடுத்துச்செல்கிறோம். ஆலைக் கழிவுகளை தீவிரமாகக் கண்காணித்து நிலம்,நீர், காற்று என சுற்றுப்புறத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கிறோம். தற்போது விரிவாக்கம் செய்யப்படவுள்ள ஆலை, முழுக்க சுயசார்புள்ள ஆலையாக செயலபடும். மின்சாரம், தண்ணீர் என்ற எந்த ஆதாரத்திற்காகவும், அருகில் உள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தப்போவதில்லை,'' என்று தெரிவித்தார்.

''இந்த ஆலையை இயக்குவது என்பதோடு, அந்த பகுதியில் உள்ள மக்களின் நலனையும் கணக்கில்கொண்டு அவர்களின் வளர்ச்சியிலும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தின் மூலம் நேரடியாக 2,000 வேலைகளும், மறைமுகமாக 20 ஆயிரம் வேலைகள் அளிக்கப்படும்,'' என்றும் அவர் தெரிவித்தார்.