பீகாரின் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்காவது வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவர் 60 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டுமென்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் 1990-களில், லாலு முதலமைச்சராக இருந்தபோது கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
டிசம்பர் 1995 முதல் 1996 ஆம் ஆண்டு வரை, அரசின் தும்கா கருவூலத்தில் இருந்து 3.13 கோடி ரூபாய் கையாடல் செய்தது தொடர்பான வழக்கில்தான் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அளிக்கப்பட்ட மூன்று தீர்ப்புகள் விவரம் :
1995-1996 ஆம் ஆண்டுகளில் லாலு பீகாரின் முதலமைச்சராக இருந்தபோது, அரசு கருவூலத்தில் இருந்து முறைகேடாக 47 லட்ச ரூபாயை எடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த முதலாவது கால்நடை தீவன ஊழல் வழக்கில், கடந்த 2013 ஆம் ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லாலுவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதுடன் 11 ஆண்டுகள் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, இரண்டாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளிகள் அவர்களின் தண்டனை காலம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது என்பதால், அவரால் 11 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை உருவானதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
1990களில் பீகார் முதலமைச்சராகவும், நிதியமைச்சராகவும் லாலு பிரசாத் இருந்தபோது 1991 முதல் 1994க்கு இடைப்பட்ட காலத்தில் 89 லட்ச ரூபாயை அரசு கருவூலத்திலிருந்து முறைகேடாக எடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுதான் இரண்டாவது கால்நடை தீவன ஊழல் வழக்கு.
இதனை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதத்தை, கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி விதித்து தீர்ப்பளித்தது.
1992 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அன்றைய பிரிக்கப்படாத பீகார் மாநிலத்தில் இருந்த மேற்கு சிங்க்பும் மாவட்டத்தின் கருவூலத்திலிருந்து முறைகேடாக 37.62 கோடி ரூபாயை எடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான மூன்றாவது கால்நடை தீவன வழக்கில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி லாலுவுக்கு ஐந்தாண்டுகள் சிறைதண்டனை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நான்காவது கால்நடை தீவன ஊழல் வழக்கிற்கான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில், 1990களில் அரசு கருவூலத்திலிருந்து முறைகேடாக 47.5 கோடி ரூபாயை எடுத்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கு விசாரணையானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன்னர் ராஷ்டிரிய ஜனதா தளம் இடைதேர்தலில் பெரும் வெற்றியை பெற்ற நிலையில் உடல் நலக்குறைவால் தற்போது லாலு பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தீர்ப்புகள் எல்லாம் பாஜக அரசு தனது தந்தையை குறி வைத்து தாக்குவதாக தெரிவித்த அவர் மகனும் பிஹார் எதிர்கட்சி தலைவரும் ஆன தெஜ்ஸ்வி இந்த தீர்ப்புகளை எதிர்த்து மேல் கோர்ட்டில் மனு செய்ய போவதாக தெரிவித்து ஊள்ளார்.