தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 24 மணி நேர கடையடைப்பு மற்றும் வணிக நிறுவனங்களின் போராட்டம் மக்களிடையே எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி இன்றைக்கு தூத்துக்குடியில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வணிகர்கள் கடையடைப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் 24 மணி நேரத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதனையடுத்து தூத்துக்குடியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும், கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதே தங்கள் கொள்கையாக இருக்கும் என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை பொருத்தவரையில், ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிர தகடுகள் உற்பத்தியாகிறது. இதற்கான மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
பாஸ்தூரி கமலம், கந்தகமலம் உள்ளிட்ட சில பொருட்களும் அங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக கடந்த 2014ம் ஆண்டு தூத்துக்குடி பகுதிகளில் கண் எரிச்சலும், அதேபோல் அங்குள்ள மக்களுக்கு உடல் உபாதைகள் போன்ற பெரிய பிரச்னையை ஏற்படுத்தியது.
இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து எதிர்த்து வருவோர்களுக்கு பிரிவினையை ஏற்படுத்தி, அவர்கள் மீது பல்வேறு விதமான சட்ட சிக்கல்களையும் ஏற்படுத்தி வருவதாகவும் இதன் எதிர்பாளர்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிக்காக கடந்த பிப்ரவரி மாதம் 20, 21, 22ம் தேதிகளில் அந்தப் பகுதி மக்கள் தன் எழுச்சியாக எழுந்து, தூத்துக்குடியில் போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து ஆயிரக்கணக்கானோர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது பல சட்டங்களும் பாய்ந்துள்ளதாகவும், இதன் ஈர்த்துப்போவதற்காக மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல ஸ்டெர்லைட் ஆலையினால் விவசாய நிலங்கள் பாழ்பட்டு வருவதாகவும், மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாழ்பட்டு போவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
எனவே தூத்துக்குடி ஒரு வாழ தகுதியற்ற நிலமாக மாறுவதற்கு முன் இந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.