பொதுக்கணக்காளர் அருண்கோயல் பதவியேற்றதில் இருந்து நியமணம் செய்த அதிகாரிகளின் பட்டியலை சிபிஐ தயாரித்து வருகிறது. அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தமிழக திட்டங்களில் மோசடி செய்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் ஏஜி அலுவலகத்தில் அதிரடியாக சிபிஐ அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தினார்கள்.
இவர்களுக்கு மத்திய ஊழியர்கள் சங்கம் சார்பில் கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.5 லட்சம் லஞ்சப் பணமும் சிக்கியது. உடனடியாக பொதுக்கணக்காளர் அருண்கோயலை கைது செய்துள்ளனர்.
அதோடு லஞ்சம் பெற்றதற்கு உடந்தையாக இருந்து அந்த அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த கணக்காளர் கஜேந்திரன் மற்றும் லஞ்சப் பணத்தை கொடுத்த சிவலிங்கம் என்ற அரசு பணியாளர், திருவள்ளூரில் பொதுப் பணித்துறையில் பணியாற்றும் ராஜா உள்ளிட்ட 4 பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அருண்கோயல் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு துறைக்கும், குறிப்பாக பொதுப் பணித்துறைக்கும், 160க்கும் மேற்பட்ட தணிக்கை அலுவலர்கள் நியமிப்பதற்கு ரூ.3 முதல் ரூ.4 லட்சம் ஒவ்வொருவரிமும் பெற்று பணி நியமனத்தை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தது. அதன் ஒரு பகுதியாகத்தான் இவர் லஞ்சம் பெற்று ஒருவருக்கு பணி வழங்கும் போது தான் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து அவர்களை கைது செய்திருக்கிறார்கள். நேற்று 4.30 மணி அளவில் உள்ளே நுழைந்து விசாரணை தொடங்கிய அதிகாரிகள் இன்று காலை 7.30 மணி அளவில் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
சுமார் 15 மணி நேரம் விசாரணை நடத்தி அதன் பின்பாக சிபிஐ நடுவர் மன்ற நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
தொடர்ந்து இந்த 2015ம் ஆண்டில் இருந்து அருண்கோயல் பணி வந்த பிறகு, யார் யாரையெல்லாம் அவர் தணிக்கை அலுவலர்களாக தமிழ்நாட்டில் நியமித்திருக்கிறார்.
எந்தெந்த தமிழக திட்டத்திற்காக அவர் நியமித்திருக்கிறார், அதில் என்னென்ன மோசடிகள் நடந்திருக்கும் என்பது குறித்தெல்லாம் விசாரிப்பதற்காக முதலில் அவர் பணி நியமனம் செய்த அதிகாரிகள் யார் என்ற பட்டியலை தயாரித்து வருகிறது. அவர்கள் முறையான வழியில் தான் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்களா அல்லது அவர்களும் லஞ்சம் கொடுத்திருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
குறிப்பாக இவரால் லஞ்சம் பெற்று நியமிக்கப்பட்ட அலுவலர்கள், தமிழக திட்டத்தில் மோசடி செய்து அதில் இருந்து பெறும் லஞ்சத்தை இவருக்கு அளித்திருப்பதாகவும், மாதாமாதம் ஒவ்வொரு நபரிடமும் இவருக்காக கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு லஞ்சப்பணமானது இவருக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
அதுமட்டுமில்லாது தொடர்ந்து இவர் வேறு என்னென்ன விஷயங்களில் எல்லாம் மோசடி செய்திருக்கிறார் என்பது குறித்து அவரது வங்கி கணக்குகள் உள்ளிட்டவைகளை எல்லாம் ஆய்வு செய்வதற்காக சிபிஐ முடிவு செய்திருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு அதிகாரிகளும் கைது செய்யப்படலாம் என சிபிஐ அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.