தென் மாநிலங்களுக்கு நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று தென்மாநில முதலமைச்சர்களுக்கு கர்நாடக முதல்வர் சீத்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
2011 மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு வரியை பிரித்து தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்போது வரிப்பணம் பிரித்து தரப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தை தென் மாநிலங்கள் கட்டுப்படுத்தி உள்ளனர். ஆனால் வட மாநிலங்களில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றார்.
தென்மாநிலங்களை விட வடஇந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. 2011 மக்கள் தொகை அடிப்படையில் வரியை பிரித்தால் அதனால் பாதிக்கப்பட போவது தென்னிந்தியா தான் என கர்நாடக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் தென் மாநிலங்களுக்கு நிதியை குறைக்கும் திட்டத்தை எதிர்க்க திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், கர்நாடக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக என்.கே.சிங் தலைமையில் 15-வது மத்திய நிதி ஆணையம் அமைப்பதற்கான அறிவிப்பை கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 27-ல் மத்திய அரசு வெளியிட்டது. இந்த குழுவின் பரிந்துரைகள் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல், 2025-ம் ஆண்டு மார்ச் 31 வரை 5 ஆண்டுகளுக்கு செல்லும். இதுவரை அமைக்கப்பட்ட நிதி ஆணையங்கள் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிதி பகிர்வை பரிந்துரைத்தன.
15-வது நிதி ஆணையம் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் முடிவெடுக்க உள்ளது. இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்தி பிறப்பு, இறப்பு சமநிலையை பராமரிக்கும் மாநிலங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்ற விதிமுறை உள்ளது. ஆனாலும், தமிழகத்துக்கு இழப்பு ஏற்படும்.
முன்னதாக மாநிலங்களின் நிதி தன்னாட்சிக்கு எதிராக பாரபட்சமாக வகுக்கப்பட்டுள்ள மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாநிலங்களுடனும், ஜி.எஸ்.டி. கவுன்சிலுடனும் கலந்து ஆலோசித்து உடனடியாக திருத்தியமைக்க வேண்டும் என்று மாநில சுயாட்சி மீட்பு விவகாரம் தொடர்பாக பாஜக அல்லாத முதல்வர்களுக்கு ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்கம், ஒடிசா, புதுச்சேரி, டெல்லி, தமிழ்நாடு (எடப்பாடி உட்பட) திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதினார் என்பதும் குறிபிட்டதக்கது
மக்கள்தொகையை தமிழகம் சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ள நிலையில், மக்கள்தொகையை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காத வடமாநிலங்கள், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களை விட கூடுதல் நிதி உதவி பெறும் வகையில் 15-வது மத்திய நிதி ஆணையத்தின் அதிகார வரம்பு உள்ளது.
ஆனால் இதை எதிர்க்க வேண்டிய தமிழக அரசு அமைதியாக இருக்க இந்நிலையில் நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று தென்மாநில முதலமைச்சர்களுக்கு கர்நாடக முதல்வர் சீத்தராமையா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.