தமிழகத்திற்குள் 20 ஆம் நுழைந்த ராம ராஜ்ஜிய ரத யாத்திரை, வரும் 25ம் தேதி ராமேஸ்வரத்தைச் சென்றடைய உள்ளது.
கேரளாவை மையமாகக் கொண்டு மகாராஷ்டிராவில் இயங்கும் ஸ்ரீ ராம தாஸ மிஷன் யூனிவர்சல் சொசைட்டி எனும் அமைப்பு சார்பில், அயோத்தியில் உள்ள கரசேவக்புரம் பகுதியில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது.
அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவது, இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை நிறுவுவது, ராமாயணத்தை பாடத்திட்டமாகக் கொண்டு வருவது, உலக இந்து தினம் உருவாக்கி கடைப்பிடிப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. அயோத்தியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள ராமர் கோயிலின் மாதிரியை யாத்திரையில் வைத்துள்ளனர்.
ரத யாத்திரை என்ற பெயரில் தமிழகத்துக்குள் நுழைந்துள்ள வாகனம் கோவில் போன்ற வடிவமைப்புடன் யாத்திரையாக வந்து கொண்டிருக்கிறது. இந்த வாகனம், மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியுள்ளதாக செய்திகள் வந்த்து.
இதை கவனத்தில் கொண்டு வந்த திமுக எம்பி கனிமொழி தனது முக நூலில் பதிவிட்ட கருத்து :
"மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, வாகனத்தின் பதிவு எண்கள் முன்னும் பின்னும் பிரதானமாக தென்பட வேண்டும். தயாரிக்கப்பட்ட வாகனத்தில் மாறுதலை செய்ய, தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மட்டுமே சட்டப்படி அனுமதி உண்டு.
கோவில் போல மாறுதல் செய்ய விதிகளில் இடமில்லை. மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 207ன் படி, காவல்துறையினர் இந்த வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்திருக்க வேண்டும். பதிவு எண் இல்லாத வாகனம், சட்டத்தின்படி, பதிவு செய்யப்படாத வாகனமாகவே கருதப்பட வேண்டும்.
இந்த வாகனம் தமிழக எல்லைக்குள் நுழைந்த கணமே பறிமுதல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பறிமுதல் செய்ய வேண்டிய காவல்துறையினர், இந்த வாகனத்துக்கு பலத்த பாதுகாப்பை வழங்கி, சமூக அமைதியை சீர்குலைக்க துணை போய்க் கொண்டுள்ளனர்.
திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் வந்த குற்றத்துக்காக ஒரு இரு சக்கர வாகனத்தை விரட்டிச் சென்று, ஒரு பெண்ணின் மரணத்துக்குக் காரணமான காவல்துறையினர், சட்டத்தைத் துச்சமாக மதித்து விதிகளை காற்றில் பறக்க விடும் ஒரு வாகனத்துக்கு பாதுகாப்பு அளிப்பது, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
காவல்துறை உடனடியாக தலையிட்டு, விதிகளை மீறியுள்ள ரத வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும். " என்று கூறியுள்ளார்.