ஆத்மி MLA-க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
தகுதி நீக்க வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் 20 ஆம் ஆத்மி MLA-க்களின் பதவியை பறித்து ஜனாதிபதி வெளியிட்ட உத்தரவை ரத்து செய்துள்ளது.
ஆம் ஆத்மி MLA-க்கள் பிரச்சனையை மீண்டும் விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, 21 ஆம் ஆத்மி MLA-க்களை சட்டப்பேரவை செயலாளர்களாக நியமித்து உத்தரவிட்டது.
டெல்லி அரசின் முடிவை கடுமையாக எதிர்த்த பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள், ஆதாயம் தரும் இரட்டை பதவிகளை வகிப்பது என்பது சட்டத்தை மீறிய செயல் என சரமாரியாக குற்றம்சாட்டின.
இதனையடுத்து அந்த 21 MLA-க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குடியரசு தலைவரிடம் புகார் தெரிவித்தன.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தடுக்க முன் தேதியிட்டு சட்டத் திருத்தத்தை டெல்லி அரசு கொண்டு வந்தது.
ஆனால் இச்சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்க அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். இதனிடையே பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜர்னைல் சிங் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதனிடையே பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகளின் புகார் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். எனவே சம்பந்தப்பட்ட 20 ஆம் ஆத்மி MLA-க்களிடமும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. இதில் 2015 மார்ச் முதல் 2016 செப்டம்பர் வரை ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்து வருவதாக 20 MLA-க்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டு உண்மை என்பதால், அவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என கடந்த குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட MLA-க்களை தகுதி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். தேர்தல் ஆணையத்தின் தகுதிநீக்க பரிந்துரையை எதிர்த்து ஆம் ஆத்மி MLA-க்கள் 20 பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தேர்தல் ஆணையம் மற்றும் எதிர்கட்சிகளின் வாதம் நிறைவடைந்த நிலையில் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி MLA-க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் உண்மை வென்றதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்றார். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை பதவி நீக்கம் செய்தது தவறு. இதையே இந்த தீர்ப்பு உணர்த்துவதாக கூறியுள்ளார்.