சென்னை திநகரை தலைமையிடமாக கொண்டு 2006ம் ஆண்டு முதல் செயல்படுகிறது கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனம். இந்த நிறுவனம் சென்னையில் கதீட்ரல் சாலை, வடக்கு உஸ்மான் சாலையில் தங்க நகை கடைகளை நடத்தி வருகிறது. மேலும் கிரிஷ் என்ற பெயரில் தங்க நகைகளை தயாரிக்கும் துணை நிறுவனத்தையும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கனிஷ்க் நிறுவனம் வைத்துள்ளது.
இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) 2018 ஜனவரி 25ந் தேதி புதுடெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது. அந்த புகாரில் கூறியிருப்பதாவது: கனிஷ்க் நிறுவனம் ஆண்டுதோறும் அதிக வருவாய் ஈட்டுவதாக போலி ஆண்டு அறிக்கைகளை தயாரித்து வங்கிகளில் கடன் பெற்றுள்ளது. அப்படி போலி ஆவணங்களை காட்டி எஸ்பிஐ வங்கியில் முதலில் ரூ. 175 கோடி வரை கடன் வாங்கியது. அதனை காட்டி மேலும் 13 வங்கிகளில் பல கோடி ரூபாய்களை கடன் வாங்கியுள்ளது.
இந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நடவடிக்கை இல்லை. இந்நிலையில் மொத்தம் 14 வங்கிகளில் வாங்கிய கடன் 31-12-2017ம் தேதி நிலவரப்படி 824 கோடியே 15 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இதில் வங்கி வாரியாக :
எஸ்பிஐ வங்கிக்கு 240.66 கோடியும்,
பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 128.31 கோடியும்,
பாங்க் ஆப் இந்தியாவுக்கு 46.20 கோடியும்,
ஐடிபிஐ வங்கிக்கு 49.13 கோடியும்,
சிண்டிகேட் வங்கிக்கு 54.94 கோடியும்,
யூனியன் வங்கிக்கு 53.68 கோடியும்,
யூகோ வங்கிக்கு 45.01 கோடியும்,
சென்ட்ரல் வஙகிக்கு 21.99 கோடியும்,
கார்பரேஷன் வங்கிக்கு 22.86 கோடியும்,
பரோடா வங்கிக்கு 32.78 கோடியும்,
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு 41.37 கோடியும்,
எச்டிஎப்சி வங்கிக்கு 27.06 கோடியும்,
ஐசிஐசிஐ வங்கிக்கு 27.61 கோடியும்,
ஆந்திரா வங்கிக்கு 32.75 கோடியும் செலுத்த வேண்டும்.
எனவே 14 வங்கிகளிடம் மோசடி செய்த பூபேஷ்குமார் ஜெயின், நீடா ஜெயின் மீது இந்திய தண்டனை சட்டத்தின் படி குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சிபிஐயிடம் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் புகாரில் தெரிவித்துள்ளது. தற்போது இந்த மோசடி தொகை வட்டியுடன் சேர்ந்து ரூ.1000 கோடியை தாண்டிவிட்டதாக வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.
கனிஷ்க் நகைக்கடை மோசடி விவகாரம் வெளியான பின்னர் நேற்று அவசர அவசரமாக எஸ்பிஐ கொடுத்த புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
அதில் பூபேஷ்குமார் ஜெயின், நீட்டா ஜெயின், கனிஷ்க் நிறுவன வர்த்தக கூட்டாளி சென்னை யானைக்கவுனியை சேர்ந்த தேஜ்ராஜ் அச்சா, எழும்பூரில் உள்ள அஜய் நிறுவன பங்குதாரர் அஜய்குமார் ஜெயின், சூளை அஸ்தாபுஜம் சாலையில் உள்ள லூனாவாத் நிறுவன பங்குதாரர் சுமித் கெடியா ஆகிய 5 பேர் மீதும், கனிஷ்க் நிறுவனம் மீதும், அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் மூலமாக அகமதாபாத், பெங்களூர், சென்னை, ஐதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, கோவை, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் விற்பனை ஷோ ரூம்களை நடத்தி வருகிறது.இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பூபேஷ்குமார் ஜெயினும், மேலும் அவரது மனைவி நீடா ஜெயின் இயக்குநராகவும் செயல்படுகின்றனர். பல்வேறு சிறு நிறுவனங்களும், அதன் நிர்வாகிகளும் இந்த நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர்.
வருமானத்தை அதிகமாக காட்டி 14 வங்கிகளில் கடன் வாங்கி ரூ.824 கோடியை திருப்பிக்கட்டாமல் மோசடி செய்த கனிஷ்க் நிறுவன உரிமையாளர் புபேஷ்குமார் ஜெயினை சிபிஐ தீவிரமாக தேடி வந்தது.இந்த நிலையில் ஸ்டேட் வங்கி புகாரின் பேரில் பூபேஷை சென்னையில் சிபிஐ கைது செய்துள்ளதாக தெரிகிறது. அவரை டெல்லி அழைத்துச் சென்று விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. அவரது மனைவியிடமும் டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூபேஷ்குமாரின் 2 வீடுகளை ஸ்டேட் வங்கி கையகப்படுத்தியுள்ளது. பூபேஷ் குமார் ஜெயின் வசித்து வந்த இந்த வீட்டிற்கு இன்று காலை வந்த ஸ்டேட் வங்கி I அதிகாரிகள் வீட்டை ஏலம் விடுவதற்கான நோட்டீஸை ஒட்டினர். இந்த வீட்டை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்க உள்ளதாகவும், இது குறித்து செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளனர்.