தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் புகார்களிலும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அமர்வு முதன்முறையாக முன் ஜாமின் வழங்கியது. எந்த கைது நடவடிக்கைக்கு முன்னரும் அடிப்படையான விசாரணை நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்தியாவில் 1955-ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976-ல் பி.சி.ஆர் அதாவது குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் என்று மாற்றம் செய்யப்பட்டது.
இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது மத்திய அரசு.
அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில், கடந்த 1989-ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டமும் வலுவாக இல்லை என்று குரல்கள் ஒலித்த நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்களை செய்து புதிய மசோதாவை கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த திருத்தத்துடன் கூடிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் -(2015) கடந்த ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது.
2015-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில் 15 முதல் 16 விழுக்காடு போலி வழக்குகள் என தெரியவந்துள்ளதாகவும்.
எனவே அப்பாவி பொதுமக்களை மதம் அல்லது சாதியின் பெயரால் பாதிப்புக்குள்ளாக்குவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
சாதி ரீதியான கொடுமைகளை நீக்க கொண்டு வரப்பட்ட சட்டம் சாதியை நிலைநிறுத்த பயன்படக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.