வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் பங்குச்சந்தையில் கடும் சரிவை சந்தித்தது.

Special Correspondent

அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் பேஸ்புக்கின் பங்களிப்பு இருந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து பேஸ்புக் நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பேஸ்புக்கில் உள்ள 5 கோடி வாக்காளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக பிரபல பிரிட்டன் தொலைக்காட்சி சேனல் நியூஸ் 4 செய்தி வெளியிட்டது.

'Psychographic Modeling Technique' என்ற தொழில்நுட்பத்தின் மூலம் குறித்த தகவல்கள் திருடப்பட்டதாகவும், இதனை டொனால்டு டிரம்ப் அரசியல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம்சாட்டியது. இந்த செய்தியால், உலகம் முழுவதும் அதிக பயனாளர்களை கொண்ட பேஸ்புக் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்தப் பிரச்சினையின் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் அந்நிறுவனத்தின் லாபம் பல மில்லியன் அளவில் குறைந்ததாகக் கூறப்படுகிறது.

பேஸ்புக் வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்ட செய்தி தெரிந்தவுடன், பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு சுமார் 7% சரிவை சந்தித்தது.

இதனால், ஒரே நாளில் அந்நிறுவனத்தின் மதிப்பில் சுமார் ரூ.2.5 லட்சம் கோடி சரிவு ஏற்பட்டது. பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு இதனால், சுமார் ரூ.39,000 கோடி சரிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கேம்பிரிட்ஜ் அனாலிடிக் நிறுவனத்தின் தலைமை அலுவலர் அலெக்சாண்டர் நிக்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.