மறைந்த ஜெயலலிதாவின் கைரேகையை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணை ரத்து செய்யப்பட்டதை அடுத்து கைரேகையை பெங்களூர் சிறைக்கு திருப்பி அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

210318ta1

Special Correspondent

கைரேகை ஆவணங்கள் இல்லாமல் வழக்கை தொடர்ந்து நடத்துமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக பிரமுகர் பி. சரவணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.

மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே. போஸ் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்ட பி.சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில், 'ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில், அதிமுக வேட்பாளராக ஏ.கே. போஸை அறிவித்தும், அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரியும் தனது இடது கை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆணையப் படிவத்தில் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

ஆனால், அவர் சுயநினைவுடன்தான் தனது கைவிரல் ரேகையைப் பதிவு செய்தாரா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே, உரிய மருத்துவ ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கை கடந்த ஆண்டு நவம்பரில் விசாரித்த நீதிமன்றம், "இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கைரேகை சர்ச்சையாக உள்ளது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது பெறப்பட்ட கைரேகைகள் உள்ளிட்ட அனைத்து அசல் ஆவணங்களையும் கர்நாடக மாநில பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும்.

ஜெயலலிதாவின் பெயரில் ஆதார் அட்டை பெறப்பட்டிருந்தால் அது தொடர்பான கைரேகை விவரங்களை ஆதார் ஆணையம் (யுஐடிஏஐ) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

இதனிடையே, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஏ.கே. போஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'ஜெயலலிதாவின் கைரேகை அடங்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க சிறைக் கண்காணிப்பாளர், யுஐடிஏஐ தலைவர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இது சட்டப்படி நியாயமானது அல்ல. மேலும், அது மற்றொருவரின் அந்தரங்கத்தில் தலையிடும் வகையில் உள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்புடைய மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும் வரை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை டிசம்பர் 8-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் 8 வாரங்களுக்குள் பதில் அளிக்க பி. சரவணன் உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு தொடர்பான விசாரணைக்குத் தடை விதித்தும் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி பி.சரவணன் தரப்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யயப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்ததோடு, ஆவணங்களை திருப்பி அனுப்பவும் உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் அந்த வழக்கே கைரேகை யார் வச்சான்னு தான் எசமான்... அதை தர கூடாதுன்னு சொன்னா எதை வச்சு வழக்ககை நடத்துறது என்று பலரும் சமூகவலைதளத்தித்திலே பதிவு செய்து வருவதால் பரபரப்பு எற்பட்டுள்ளது...