தினேஷ் 8 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 28 ரன்கள் எடுத்தும் கடைசி பந்துக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் அடித்து வெற்றியை தேடி தந்தார்.

Special Correspondent

நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா-வங்கதேசம் அணிகள் முன்னேறின.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வென்றது.

ரோஹித் சர்மா ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவும் நிலைக்கு சென்றது இந்திய அணி. எனினும், அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி அணியை "த்ரில்' வெற்றி பெறச் செய்தார். அவரே ஆட்டநாயகன் ஆனார். வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன் ஆனார்.

முன்னதாக, டாஸ் வென்ற இந்தியா பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணியில் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 11 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார்.

தமிம் இக்பால் 15 ரன்கள் எடுத்திருந்தபோது யுவேந்திர சாஹல் பந்துவீச்சில் ஷர்துல் தாக்குரிடம் கேட்ச் ஆனார். இந்நிலையில், ஒன் டவுனாக சபிர் ரஹ்மான் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். எனினும், மறுமுனையில் செம்யா சர்க்கார், முஷ்ஃபிகர் ரஹிம் விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னில் வீழ்ந்தன. அவர்களை யுவேந்திர சாஹல் வீழ்த்தினார்.

தொடர்ந்து, மஹ்முதுல்லா 21, கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். அணியின் ஒரே நம்பிக்கையாக நீடித்த சபிர் ரஹ்மான் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 77 ரன்கள் சேர்த்து வீழ்ந்தார். கடைசி விக்கெட்டாக ருபெல் ஹுசைன் டக் அவுட்டானார். இவர்கள் இருவரையும் 18-ஆவது ஓவரில் அடுத்தடுத்த பந்தில் போல்டாக்கினார் ஜெயதேவ் உனத்கட். இறுதியாக மெஹதி ஹசன் 19 ரன்களுடனும், முஸ்டாஃபிஸýர் ரஹ்மான் ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் யுவேந்திர சாஹல் 3, ஜெயதேவ் உனத்கட் 2, வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 167 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்தியாவில் தொடக்க வீரர் தவன் 10 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த ரெய்னா டக் அவுட்டானார். சற்று நிலைத்த கேப்டன் ரோஹித் சர்மா 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 56 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

மறுமுனையில் லோகேஷ் ராகுல் 24, மணீஷ் பாண்டே 28, விஜய் சங்கர் 17 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில், அதிரடியாக களம் கண்ட தினேஷ் கார்த்திக் பவுண்டரி, சிக்ஸர்களுக்கு பந்தை விரட்டினார்.

கடைசியாக ஒரு பந்தில் 5 ரன்கள் தேவை இருந்த நிலையில், சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்தார். தினேஷ் 8 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 28 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேச தரப்பில் ருபெல் ஹுசைன் 2, ஷாகிப் அல் ஹசன், நஸ்முல் இஸ்லாம், முஸ்டாஃபிஸர் ரஹ்மான், செüம்யா சர்க்கார் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

சாம்பியனான இந்திய அணிக்கு இலங்கை அதிபர் மைத்ரி பால சிறீ சேனா கோப்பையை வழங்கினார்.