தனது முகநூலில் சீத்தராமையா, கர்நாடக முதல்வர் தெரிவித்த கருத்து விவரம் தமிழில் மொழிபெயர்த்தவர் ஆழி செந்தில்நாதன்.

Special Correspondent

கர்நாடக அரசாங்கம், தனக்கென ஒரு கொடியை உருவாக்கிக்கொள்ள முடியுமா என்பது குறித்து ஆராய ஒரு குழுவைக் கடந்த ஜூலையில் நியமித்தது. அன்றைய தினம், டெல்லி தொலைக்காட்சிகள் கொந்தளித்தன. இந்தியாவின் ஒற்றுமை இனி என்னாகும் என்று தொலைக்காட்சி நெறியாளர்கள் கவலைப்பட்டார்கள். தேசியம் என்றால் என்னவென்று கர்நாடக அரசாங்கத்துக்குப் பாடமெடுக்கவும் அவர்கள் தவறவில்லை. இந்த ஆண்டு, கர்நாடக அரசாங்கம் அமைத்த குழு தன்னுடைய பரிந்துரையைச் செய்திருக்கிறது. அந்தக் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு, அரசு இலச்சினைகள் மற்றும் பெயர்கள் (துஷ்பிரயோகத் தடுப்பு) சட்டம் 1950-ன் கீழ் கர்நாடகக் கொடியைச் சேர்த்துக்கொள்ளும்படி மத்திய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்வு ஒரு கேள்வியை எழுப்புகிறது: கர்நாடக மக்கள், கன்னட மொழிக்கு முதலிடம் கொடுக்கும் வகையிலும் தங்களுடைய சொந்த விவகாரங்கள் தொடர்பாக முடிவெடுப்பதில் தங்களுக்கே அதிக அதிகாரம் இருக்க வேண்டும் என்கிற அடிப்படையிலும், தங்கள் மாநிலத்துக்கென ஒரு கொடியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால், அது வலுவான தேசத்தை உருவாக்கும் நோக்கத்தோடு முரண்படக்கூடிய ஒன்றா?

1947-ல், இந்தியா ஒரு இளம் தேசமாக இருந்தது. எந்தப் பிளவுவாதமும் பிரிவினைவாதமும் நம்மை அண்டிவிடக் கூடாது என்று எச்சரிக்கையோடு நாம் இருக்க வேண்டி யிருந்தது. எனவேதான், வலுவான மத்திய அரசாங்கத்தைக் கொண்டிருக்கிற, மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா ஆனது. அந்த ஒன்றியத்துக்குள் பல சமஸ்தானங்களை ஒருங்கிணைக்கும் பணியில் சர்தார் படேல் இறங்கியபோது, வலுவான மத்திய அரசாங்கம் என்பதற்கோர் அர்த்தமும் இருந்தது. இன்று 70 ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில், ஒரு தேசமாக நாம் போற்றத்தக்க வகையில் செயல்பட்டிருக்கிறோம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் காலத்தை வென்று நிற்கிறது. அதேசமயம், நாம் தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக உருவான கொந்தளிப்புகளிலிருந்தும் பஞ்சாப், அசாம் போன்ற சில குறிப்பிட்ட மாநிலங்களில் எழுந்த தன்னாட்சிக்கான கோரிக்கைகளிலிருந்தும் சில பயனுள்ள பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். மாநிலங்களின் ஒன்றியம் என்பதிலிருந்து மாநிலங்களின் கூட்டரசு என்பதை நோக்கி நாம் உருவாக்கி கொண்டிருக்கிறோம்.

எனவே, பேரளவுக்கான கூட்டாட்சி சார்ந்த தன்னாட்சிக் கான கோரிக்கைகளும் பிராந்திய அடையாளங்களை அங்கீகரிப்பதும் தேசத்தோடு முரண்படுவதாக நான் நினைக்கவில்லை. கர்நாடகம் தன்னுடைய கன்னட அடை யாளத்துக்காகப் பெருமைகொள்கிறது. கர்நாடகத்தின் மிகத் தொன்மையான கல்வெட்டு கன்னட மொழியில் ஹாசன் மாவட்டத்திலுள்ள ஹல்மிதியில் இருக்கிறது - அது கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மிகப் பழைய கன்னட முடியாட்சி பனவாசியிலிருந்து ஆட்சிசெய்த கடம்பர்களுடையது - அது கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பல தசாப்தங்களாக மஞ்சள் சிவப்பு கர்நாடகக் கொடியைப் பயன்படுத்திவருகிறோம். ஆனாலும், எங்கள் மகாகவி குவேம்பு கூறியதுபோல, கர்நாடகம் பாரத அன் னையின் மகள்தான். ‘ஜெய பாரத ஜனனிய தனுஜாதே’. எனவே, எங்களுடைய அடையாளத்தை நாங்கள் உறுதிசெய்துகொள்ளும்போது டெல்லியிலுள்ள தொலைக்காட்சி நெறியாளர்கள் பதறுவது தேவையற்ற ஒன்று.

இந்த ஒன்றியத்தில் எங்களுடைய இடத்தை உறுதிப்பட நிலைப்படுத்தியிருக்கும் நிலையில், நாங்கள் நாள்தோறும் எதிர்கொள்கிற, கூட்டாட்சி சார்ந்த சில சிக்கல்களை எழுப்ப விரும்புகிறேன். ஒப்பீட்டளவில் நன்கு வளர்ந்த மாநிலங்களான கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம் போன்றவை மத்திய வரித்தொகுப்புக்குக் கூடுதலாகப் பணத்தைச் செலுத்தி, அதே சமயம் மத்திய அரசிடமிருந்து குறைவாகத் திரும்பப் பெறுகின்றன. மத்திய அரசிடமிருந்து பெறும் நிதியானது, மத்திய வரிகளிலிருந்து மாநிலங்களுக்குப் பகுத்தளிக்கப்படும் பங்காகவும் மத்திய நிதியுதவித் திட்டங்கள் மூலமாக மானியங்களாகவும் வருகின்றன. மத்திய நிதியுதவித் திட்டங்கள் பல்வேறு நிபந்தனைகளோடும் வழங்கப் படுகின்றன.

இந்தத் திட்டங்கள் ஒட்டுமொத்த நாட்டுக்காகவும் திட்டமிடப்படுபவை. அவற்றை அமல்படுத்தும்படி நாங்கள் கட்டாயப்படுத்தப்படுகிறோம், அதற்காக எங்கள் பங்கை யும் அளிக்கும்படி நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறோம். எங்கள் மாநிலங்களிலிருந்து வசூலிக்கப்படும் வரியின் பெரும் பகுதியை நாங்களே பெற்றுக்கொள்வதற்கேற்ற ஓர் அமைப்பு தேவைப்படுகிறது. அத்துடன் மத்திய நிதியுத வித் திட்டங்களில் எங்களுடைய பங்கு குறைக்கப்பட வேண்டும். உண்மையிலேயே மத்திய நிதியுதவித் திட்டங் கள் தேவைப்படுகின்றன என்றால், தேவைகளுக்கேற்ப அவற்றைத் திருத்திக்கொள்ள முடியும் வகையில் அவை நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும்.

வரலாற்றுரீதியாகவே, தெற்குதான் வடக்குக்கு மானியம் அளித்துவருகிறது. விந்தியத்துக்குத் தெற்கேயுள்ள ஆறு மாநிலங்களும் அதிக வரிகளைச் செலுத்தி குறைவான நிதியைத் திரும்பப்பெறுகின்றன. எடுத்துக்காட்டாக, உத்தர பிரதேசம் மத்திய வரித்தொகுப்புக்கு அது தரும் ஒரு ரூபாய்க்கு ஈடாக அதே வரித்தொகுப்பிலிருந்து 1 ரூபாய் 79 காசு திரும்ப எடுத்துக்கொள்கிறது. ஆனால், கர்நாடகம் மத்திய வரித்தொகுப்புக்கு ஒரு ரூபாய் தருகிறது என்றால், அது திரும்பப் பெறுவது 47 காசு மட்டுமே. பிராந்திய சமனின்மைகளைச் சரிசெய்ய வேண்டும் என்பதை அங்கீகரிக்கும் அதேசமயம், வளர்ச்சிக்கு வெகுமதி எங்கே என்றும் கேட்கிறேன். மக்கள்தொகை அடிப்படை யில் பார்த்தால், தெற்கேயுள்ள மாநிலங்கள் ஏற்கெனவே மக்கள்தொகை பதிலீட்டு விகித அளவை எட்டிவிட்டன. ஆனாலும், மத்திய வரியைப் பகிர்ந்தளிக்கும்போது மக்கள்தொகை என்கிற காரணியே பிரதான காரணியாக முன்வைக்கப்படுகிறது. நாம் இன்னும் எவ்வளவு காலம் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு மானியமளிக்கப்போகிறோம்?

இந்தியாவுக்கும் உலகின் பிற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தைப் பாதிக்கும் பொருளாதாரக் கொள்கைகள், மாநிலங்களையும் பாதிக்கின்றன. ஆனாலும், இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையை வகுக்கும் இடத்தில் மாநிலங்களுக்கு இடமில்லை. எடுத்துக்காட்டாக, தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இலங்கை மூலமாக வியட்நாமிலிருந்து மலிவுவிலையில் மிளகு இறக்குமதியை ஊக்கப்படுத்துகிறது. இது கேரளத்திலும் கர்நாடகத்திலும் உள்ள மிளகு விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கிறது. மத்திய அரசின் வர்த்தகக் கொள்கை, விவசாயம் சார்ந்த இறக்குமதிகளை ஊக்குவிக்கிறது. ஆனால், விவசாயம் சார்ந்த ஏற்றுமதிகளை எதிர்மறையாகப் பாதிக்கிறது. சந்தைக்கு அனுப்பக்கூடிய அளவுக்கு உபரி விளைபொருட்களை வைத்திருக்கும் விவசாயிகளின் லாபவாய்ப்பை இது பாதிக்கிறது.

சுருக்கமாகச் சொல்லப்போனால், மத்திய அரசின் கொள்கைகளால் பாதிக்கப்படுகிற விவசாய வலிகளுக் கான நிவாரணத்தை மாநிலங்கள் மட்டுமே அளித்துவிட முடியாது. ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கப்பட்டதைப் போல, ஏற்றுமதிக் கொள்கைகள், விவசாயப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும் ஒரு நிலையான பொறியமைவு ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எங்கள் விவசாயிகளைப் பாதிக்கும் விஷயங்களில் சரியான கொள்கையை வகுப்பதில் எங்களுடைய பங்கை ஆற்ற முடியும். முன்பிருந்த தேசிய வளர்ச்சி கவுன்சிலை (என்டிசி) நிதி ஆயோக் கிட்டத்தட்ட ஒழித்துக்கட்டிவிட்டது. வேறு ஒரு புதிய பொறிமுறையும் உருவாக்கப்படவில்லை. என்டிசி கூட ஒரே பேச்சரங்கமாகவே இருந்தது. நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தை உறுதிசெய்யக்கூடிய புதிய பொறி முறையை அதியவசரமாக உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

ஐரோப்பாவில் உள்ள பல தேசங்களைவிடப் பெரியது கர்நாடகம். பல இந்திய மாநிலங்களும் அவ்வாறே. வலு வாக மாற வேண்டுமானால், வளரவும் செழிக்கவும் உதவ வேண்டும். மாநிலங்கள் தங்களுடைய அடையாளங்களை உறுதிப்படுத்திக்கொள்வதால் ஏதேனும் தீங்குவந்து விடுமோ என்கிற கற்பிதத்தால் பதற்றம் அடைவதைவிட்டுவிட்டு, மாநிலங்கள் தத்தம் திறமையாலும் அறிவாலும் வளரும்படி சுதந்திரமாக விடப்பட வேண்டும்.

தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளைத் தாங்களே உருவாக்கிக்கொள்வதற்கும், கடன்பெறும் தகுதி இருக்கும்பட்சத்தில் சர்வதேச அளவிலான நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கவும், மத்திய அரசாங்கத்திடம் உரிமங்களுக்காகத் தொங்கிக்கொண்டிருக்காமல் தமக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைத் தாங்களே உருவாக்கிக்கொள்வதற்கும், தங்களுடைய விருப்பத் தேர்வின் அடிப்படையில் திட்டங்களை உருவாக்கிக்கொள்வதற்கும் மாநிலங்களுக்குப் பெயரளவிலான தன்னாட்சி இன்று தேவைப்படுகிறது.

நாம் இப்போது விரும்புகிறோமோ இல்லையோ, இந்தியாவில் மாநிலங்கள் மொழிவாரியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல மொழிகளும் கலாச்சாரங்களும் இந்திய அடையாளத்தைவிட மிகவும் மூத்தவை. ஆனாலும், ஒரு பொது வரலாற்றின் அடிப்படையில் பொது நாகரிகத்தின் அடிப்படையில், பொது விதியின் அடிப்படை யில் இந்தியர்களாகிய நாம் கட்டுண்டிருக்கிறோம்.

பெருமைமிகு கன்னடன் என்கிற என்னுடைய அடையாளம் பெருமைமிகு இந்தியன் என்கிற என்னுடைய அடையாளத்தோடு முரண்பட்டதல்ல. எனவே, கர்நாடகத் தில் நாங்கள் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று பேசும்போதும், இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக வாதிடும்போதும் ஒரு மாநிலக் கொடியை ஏற்றுக்கொள்ளும்போதும் நாங்கள் வலுவான ஒரு இந்தியாவைக் கட்டமைப்பதற்கு எங்கள் பங்கைச் செலுத்துகிறோம் என்றே உறுதியாக நம்புகிறோம். நம்பிக்கையுள்ள இந்திய தேசம் என்றால், அது தன் உறுப்பு மாநிலங்களின் தனித்துவங்களின் மீது நம்பிக்கை கொள்கிற ஒன்றாகத்தானே இருக்க முடியும்? .