சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும். இருக்கைகள் குறைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும். தியேட்டர்கள் லைசென்சை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். பராமரிப்பு கட்டணமாக குளிர்சாதன தியேட்டர்களுக்கு ரூ.5-ம், குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டருக்கு ரூ.3-ம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 16-ந்தேதி (இன்று) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
ஆனால் சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மறுத்துவிட்டனர். சென்னையில் உள்ள 147 தியேட்டர்கள் வழக்கம் போல் இன்று இயங்கும் என்று அவர்கள் நேற்றுமுன்தினம் அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. சங்கத்தின் பொதுசெயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திரையரங்குகளை திட்டமிட்டப்படி இன்று முதல் மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், ‘திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசிடம் சில கோரிக்கைகளை வைத்திருந்தோம். அதற்கு இதுவரை சாதகமான பதில் வரவில்லை.
எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் தொடங்குகிறது. இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூடுவது என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மறுஅறிவிப்பு வரும் வரை தியேட்டர்களை திறக்க வேண்டாம் என்று உரிமையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்.
இதனால் சென்னை தவிர வெளியூர் தியேட்டர்கள் அனைத்தும் இன்று முதல் மூடப்படுகின்றன.