முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை தானும், தனது சகோதரியும் முழுமையாக மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்திருக்கும் மனிதநேயமிக்க கருத்தை பெரிதும் வரவேற்கிறேன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கூறியுள்ளார்.
இதனை வரவேற்கும் அதேவேளையில், குற்றம் சுமத்தப்பட்டு 26 வருடத்திற்கும் மேலாக சிறையிலிருக்கும் பேரறிவாளன், நளினி உள்ளிட்டோரை காலம்தாழ்த்தாமல் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக சிங்கப்பூர் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு கல்லூரி மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது: நானும், எனது தங்கை பிரியங்காவும், எங்கள் தந்தை ராஜிவ் காந்தி மற்றும் பாட்டி இந்திரா ஆகியோர் கொலை செய்யப்பட்டபோது கடும் மனவருத்தம் அடைந்தோம். எனது தந்தையை கொன்றவர்கள் மீது நாங்கள் கடும் கோபத்தில் இருந்தோம். ஆனால், இப்போது அவர்களை, நானும் எனது தங்கையும் மன்னித்துவிட்டோம். யாரையும் வெறுக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவெடுத்துள்ளோம். பிரபாகரனின் உடலை தொலைகாட்களில் பார்த்தேன் அது எனக்கு மிகவும் வருத்தமளித்தது.
ஒருவரை இவ்வளவு கொடூரமாக கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வைகோ, அற்புதம்மாள் உள்ளிட்டவர்களும் வரவேற்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை தானும், தனது சகோதரியும் முழுமையாக மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்திருக்கும் கருத்துக்கு வரவேற்பு அளித்துள்ளார்.