தனது மகளைக் காப்பாற்றவே பி.என்.பி வங்கி விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மவுனம் சாதிக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Special Correspondent

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த விவரம் :

பி.என்.பி வங்கி விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏன் மவுனம் சாதிக்கிறார் என்று தற்பொழுது தெரிய வந்துள்ளது. தனது வழக்கறிஞர் மகளைக் காப்பற்றவே அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார். கைதாவதற்கு ஒரு மாதம் முன்னதாக குற்றவாளி நீரவ் மோடியின் நிறுவனத்திடம் இருந்து அவரது மகளின் சட்ட நிறுவனத்திற்கு, சட்ட ஆலோசனைக்காக பெருமளவு பணம் வழங்கப்பட்டுள்ளது. நீரவ் மோடியுடன் தொடர்புடைய பிற சட்ட ஆலோசனை நிறுவனங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. ஆனால் அவர் மகளது நிறுவனத்தில் ஏன் நடத்தப்படவில்லை?

இவ்வாறு ராகுல் கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் 'தி வயர்' என்னும் ஆங்கில செய்தி இணையதளத்தின் செய்தி ட்வீட் ஒன்றையும் அவர் தனது ட்வீட்டில் இணைத்து வெளியிட்டிருந்தார். அதில் "இன்னும் வெளிவரவே இல்லாத ஒரு செய்தியை ஆளும்கட்சித் தரப்பு மறுக்க முயற்சிக்கும் பொழுதே , நீங்கள் சரியான காரியத்தைத்தான் செய்கிறீர்கள் என்பது தெளிவாகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் இணைப்பாக உள்ள செய்தியில் 'தி வயர்' தளமானது தெரிவித்துள்ளதாவது:

நீரவ் மோடியின் நிறுவனத்திடம் இருந்து ஜேட்லியின் மகளின் சட்ட நிறுவனத்திற்கு, சட்ட ஆலோசனைக்காக பெருமளவு பணம் வழங்கப்பட்டது தொடர்பாக எங்களுக்குக் கிடைத்த ஒரு தகவலின்படி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மகள் மற்றும் அவரது கணவர் இணைந்து நடத்தும் சட்ட நிறுவனத்திற்கு, விளக்கம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தோம்.

அதற்கு ஜேட்லியின் மருமகன் ஜெயேஷ் பக்ஷி, நீரவ் மோடியின் நிறுவனத்திடம் இருந்து கடந்த ஆண்டு டிசம்பரில், அவர்களது நிறுவனத்திற்காக சட்ட ஆலோசனைகள் வழங்கக் கோரி விண்ணப்பம் மற்றும் தொகை வந்திருந்ததாகவும்..

ஆனால் அது தொடர்பாக எந்த விதமான வேலைகளிலும் ஈடுபடும் முன்னரே குறிப்பிட்ட நிறுவனம் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள விபரம் தெரிய வந்ததும், உடனடியாக இவ்வருட துவக்கத்திலேயே வாய்ப்பை மறுத்து திருப்பி விட்டதாக தெரிவித்துள்ளார்.

அதாவது நிரவ் மோடி வெளி நாட்டுக்கு தப்பி ஒடிய பிறகு அது செய்தியாக வந்த பிறகு திருப்பி பணத்தை தந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.