ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் மாநிலங்களுக்கு இடையே ரூ.50 ஆயிரத்துக்கும் மேலான மதிப்புள்ள பொருட்களை கொண்டு செல்வதற்கான இ-வே பில் முறையை அமல்படுத்துவது, மாநிலத்துக்குள் பொருட்களை கொண்டு செல்வதற்கான இ-வே பில் முறையை அமல்படுத்துவது, எளிமையான வருமான கணக்கு தாக்கல் செய்யும் முறையை அமல்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்துக்குப்பின் அருண் ஜெட்லி அளித்த பேட்டியில் ": மாநிலங்களுக்கு இடையே ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கு இ-வே பில் கொண்டு செல்லும் நடைமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது " என்றார்.
மேலும் அவர் "மாநிலத்துக்குள் பொருட்களை கொண்டு செல்வதற்கான இ-வே பில் முறை ஏப்ரல் 15ம் தேதி முதல் ஒவ்வொரு கட்டமாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களும் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
முதல் குழுவில் எந்தந்த மாநிலங்கள் ஏப்ரல் 15ம் தேதி முதல் இ-வே பில் முறையை அமல்படுத்த வேண்டும் என்பது ஏப்ரல் 7ம் தேதி முடிவு செய்யப்படும். ஜூன் 1ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களும் இ-வே பில் முறையை அமல்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி ஆய்வாளர் கேட்கும்போது இந்த இ-வே பில் காட்டப்படவேண்டும். இந்த நடைமுறை வரி ஏய்ப்பை தடுக்கவும், வரி வசூலை அதிகரிக்கவும் உதவும்" என்றார்
மேலும் "கணக்கு தாக்கல் முறை எளிமையாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் வரிஏய்ப்பை தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என, மத்திய, மாநில வரி அதிகாரிகள் விரும்புகின்றனர். இது தொடர்பாக ஜிஎஸ்டி கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஆனால் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறான நடைமுறையை கூறின. அதனால் தற்போதுள்ள ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டர் தாக்கல் முறை ஜூன் வரை நீட்டிக்கப்படுகிறது. கணக்கு தாக்கலை மேலும் எளிமைபடுத்தும் நடைமுறை குறித்து அமைச்சர்கள் குழுவினர் ஆலோசித்து முடிவு எடுப்பர் என்றும் அருண் ஜெட்லி கூறினார்.
இதை தவிர ஜிஎஸ்டி முறையில் ஏற்றுமதியாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க இ-வேலட் திட்டத்தை அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தவும் ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ஏற்றுமதியாளர்களுக்கு கொள்முதல் செய்த பொருட்களுக்கு 0.1 சதவீதம் வரி செலுத்தி அதை திருப்பி பெற முடியும். இது அமல்படுத்தும் வரை வரி விலக்கு கோரும் முறையை ஏற்றுமதியாளர்கள் தொடரலாம்.
ஏஏ, இபிசிஜி மற்றும் இஓயு திட்டங்களின் கீழ் உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் நிகர்நிலை ஏற்றுமதியாக கருதப்படும். இதில் பொருட்களை அனுப்புவோர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் செலுத்தி ஜிஎஸ்டி வரிக்கு பணத்தை திரும்ப கோர முடியும். டிடிஎஸ் பிடித்தம், டிசிஎஸ் வசூல், ரிவர்ஸ் கட்டணம் அமல் ஆகியவற்றை ஜூன் 30ம் தேதி வரை ஜிஎஸ்டி கவுன்சில் நிறுத்திவைத்துள்ளது. வருமானவரித்துறை மூலம் வரிசெலுத்துவோருக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கான பணியும் ஜிஎஸ்டி அமல்படுத்தும் குழு மேற்கொண்டு வருகிறது என்றும் அருண் ஜெட்லி கூறினார்.