கிழக்கு கோட்டா பகுதியின் பெரிய நகரமாக விளங்கும் டூமா நகரின்தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்துக்கான பாதைகளை பிற பகுதிகளில் இருந்து துண்டித்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் கூறியுள்ளது.

Special Correspondent

கிழக்கு கோட்டா பகுதியில் பாதி அளவு தற்போது சிரியா அரசின் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், கடந்த மூன்று வாரங்களில் போர் நடக்கும் பகுதிகளில் சுமார் 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

கிழக்கு கோட்டாவின் பகுதிகளை தனித்தனியாகப் பிரித்து, அவற்றை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் செய்வதன்மூலம், கிளர்ச்சியாளர்களுக்குத் தேவையானஆயுதங்கள் மற்றும் பொருட்கள் கிடைக்கும் விநியோகத் தொடரமைப்பைத் துண்டிப்பதே சிரியா அரசின் இலக்கு என்று கூறும் அரேபிய விவகாரங்களுக்கான பிபிசியின் ஆசிரியர் செபாஸ்டியன் உஷர் , அந்த இலக்கைத் தற்போது சிரியா அடைந்துள்ளதாவே தோன்றுகிறது என்று கூறுகிறார்.

கிழக்கு கோட்டா பகுதியின் வடக்கே அமைந்துள்ள டூமா மற்றும் மேற்கே அமைந்துள்ள ஹரஸ்தா ஆகிய பெருநகரங்களை இணைக்கும் சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரான மிஸ்ரபாவை சிரியா அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளதுடன், அதைச் சுற்றியுள்ள விளைநிலங்களிலும் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

இதன் மூலம் டூமா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஹரஸ்தா மற்றும் கிழக்கு கோட்டாவின் தெற்கில் உள்ள பிற பகுதிகள் ஆகியன தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு அந்த மூன்று பகுதிகளிலும் இருக்கும் கிளர்ச்சியாளர்கள் எவ்விதத்திலும் தொடர்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

கிழக்கு கோட்டாவை மூன்றாகப் பிரித்துள்ளதாக சிரியா அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளபோதிலும், டூமா மற்றும் ஹரஸ்தா ஆகிய பகுதிகளுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்படவில்லை என்று கிளர்ச்சியாள்கள் குழு ஒன்றின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

இதனிடையே, கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பகுதிகளில் சிறை வைக்கப்பட்டிருந்த ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் அமைப்பினரால் வெளியேற்றப்பட்ட ஜிகாதிகள் கிழக்கு கோட்டாவில் இருந்து ஹாமா மாகாணம் வந்தடைந்துள்ளதாக அரசு எதிர்ப்பாளர்களின் வலைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.