தீவிர புற்று நோய்க்கு ஆளானவர்கள், எய்ட்ஸ் நோயால் அவதிப்படுபவர்கள், மூளைச்சாவு அடைந்தவர்கள், நீண்ட நாள்களாக மீளாத கோமா நிலையில் இருப்பவர்கள் என குணப்படுத்த இயலாத உயிர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கருணைக் கொலை செய்வதில் பல்வேறு சட்டச் சிக்கல்கள் நீடித்து வருகின்றன.

Special Correspondent

மருத்துவத் துறையில் கருணைக் கொலை என்ற பெயரில் சட்டவிரோதமான நடவடிக்கைகள் அரங்கேறலாம் என்பதால் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சில தருணங்களில் கடுமையான நோய்களின் தாக்கத்தால் மரணத் தருவாயில் அவதிப்படும் நபர்களை கருணைக் கொலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. ஆனால், அதற்கான வரையறைகள் தெளிவுபடுத்தப்படாமல் இருப்பதால் அதனை நடைமுறைப்படுத்த இயலாத நிலை நிலவுகிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு இதுதொடர்பான ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கருணைக் கொலை என்றால் என்ன? அதனை எவ்வாறு செயல்படுத்தலாம்? என்பது தொடர்பான வரையறைகளை வெளியிட்டது.

சுயநினைவின்றி, மருத்துவ உபகரணங்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே உயிர் வாழ்ந்து வரும் ஒருவரை உரிய சட்ட விதிகளுக்குட்பட்டு கருணைக் கொலை செய்யலாம் எனத் தெளிவுபடுத்தப்பட்டது. அதுவும், மருத்துவ உபகரணங்களின் செயல்பாட்டை நிறுத்துவது, மருந்துகளை நிறுத்தவது போன்ற நடவடிக்கைகள் வாயிலாகவே அதனைச் செயல்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் விளக்கமளித்தது.

இந்நிலையில், கருணைக் கொலை தொடர்பான முடிவை எப்போது எடுக்க வேண்டும்? எவரால் எடுக்கப்பட வேண்டும்? என்பது தொடர்பான விளக்கங்களைக் கோரி தன்னார்வ அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதுதொடர்பான வழிமுறைகளை வெளியிட வேண்டும் என்று அதில் அறிவுறுத்தியிருந்தது.

அந்த மனுவை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகிய 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. வாத, பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வாழ்நாளின் இறுதிக்கட்டத்தை எட்டிய நோயாளிகள், தங்களை எப்போது கருணைக் கொலை செய்யலாம்? எவ்வாறு அதை நடைமுறைப்படுத்தலாம்? என்பது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க அனுமதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் சுயநினைவை இழந்து மரணத் தருவாயில் இருக்கும்போது, மருத்துவக் குழுவால் அவரது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, அது ஏற்புடையதாக இருப்பின் கருணைக் கொலை செய்யலாம்.

இதுதொடர்பான வரையறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கருணைக் கொலை தொடர்பான உரிய சட்டம் அமலாகும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பு பலரிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ள இந்தத் தருணத்தில், பாலியல் வன்கொடுமையால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து 42 ஆண்டுகளாக படுத்த படுக்கையாய்க் கிடந்த அருணா ஷென்பாக்கின் வாழ்வும், கருணைக்கொலை மறுக்கப்பட்ட வழக்கும் முக்கியமானது.

மும்பையில் உள்ள பரேல் பகுதியின் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தவர் அருணா ஷென்பாக். 1973ஆம் ஆண்டு அந்த மருத்துவமனையின் அடித்தளத்தில் உடைமாற்றிக் கொண்டிருந்த அருணா ஷென்பாக்கை, அதே மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளராக பணிபுரிந்த சோஹன்லால் பாரதா வால்மீகி கடுமையாக தாக்கினார். நாயைக் கட்டும் சங்கிலியால் அவரது கழுத்தை இறுக்கமாகக் கட்டி அவரை பாலியல் வன்புணர்வு செய்தார்.

அருணாவின் தற்காப்புகளைத் தடுக்க அவரது மார்பகத்தில் முழங்காலால் அழுத்தியதில், மூளைக்கு ஆக்சிஜன் செல்லும் நரம்புகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அவரது கர்பப்பையும் கடுமையாக சேதமடைந்திருந்தது.

மறுநாள் காலை ரத்தவெள்ளத்தில் கிடந்த அருணாவை மீட்ட மருத்துவமனை ஊழியர்கள், சிகிச்சைக்காக அனுமதித்தபோது அவர் சுயநினைவில் இல்லை. அதைத் தொடர்ந்து 37 ஆண்டுகளும் அவருக்கு சுயநினைவு திரும்பவேயில்லை.

அருணாவின் இந்த நிலையைக் கண்ட மனித உரிமைகள் ஆர்வலர் பின்கி விராணி என்பவர் அருணாவிற்கு கருணைக்கொலை கோரி 2009ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பான தீர்ப்பினை மார்ச் 7, 2011 உச்சநீதிமன்றம் வழங்கியது. அதில் பின்கி விராணியின் கோரிக்கையும், முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதுதான் என்றாலும், அவர் அருணாவிற்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதவர் என்பதால் பின்கியின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்கிறது என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து, அடுத்த ஐந்து ஆண்டுகள் சேர்த்து 42 ஆண்டுகள் எந்தவித சுயநினைவும் இல்லாமல் மூர்ச்சையாகக் கிடந்த அருணா, கடந்த மே 18, 2015 அன்று நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டு மரணம் அடைந்தார்.

ஒருவர் கண்ணியமாக இறப்பதற்கான எல்லா உரிமையும் அவருக்கு உண்டு என உச்சநீதிமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் கூறியிருக்கிறது. இதற்கான சட்டம் ஆனால் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

அதுவரை நீதிமன்றத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படும் என கூறப்பட்டிருக்கிறது. அதேசமயம், இதை வணிகமாக்கும் நோக்கங்களோ, மற்ற தவறுகளோ நிகழாமல் இருக்குமா என்ற கேள்விகளும் எழுகிறது . கவல் தெரிவிககிறது .