உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வகையில் குக்கர் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் ஒதுக்கக் கோரி டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த மனு மீது ., டி.டி.வி. தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக வி.கே. சகிகலாவை உள்ளடக்கிய டி.டி.வி. தினகரன் அணி சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே, தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் தரப்பு, புதிய பெயரில் இயங்கும் வகையில் கட்சியின் பெயரை ஒதுக்குவதற்கும், குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் அனுமதி அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பாலி முன் கடந்த பிப்ரவரி19-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.டி.வி. தினகரன் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி, 'உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் வரையிலும் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் ஒதுக்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற தாமதம் எங்கள் அணியின் அரசியல் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்' என்று வாதிட்டனர்.இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ரேகா பாலி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் நீதிபதி ரேகா பாலி வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பின் விவரம்:
ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வகையில், குக்கர் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் ஒதுக்கக் கோரி மனுதாரர் (டி.டி.வி. தினகரன்) கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்பில்லை என எதிர் மனுதாரர்கள் (முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்) குறிப்பிட்டுள்ளனர்.
இதைக் கருத்தில் கொண்டால், மனுதாரரின் கோரிக்கை உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டுமானதாக இல்லை. மேலும், குறிப்பிட்ட தேர்தலுக்கு மட்டும் சின்னத்தையும், பெயரையும் மனுதாரர் கேட்கவில்லை. இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை முடியும் வரை அரசியல் நடவடிக்கைகளுக்காக தாற்காலிகமாக பயன்படுத்தும் வகையில் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் ஒதுக்குமாறு மனுதாரர் கேட்டுள்ளார். இவற்றைப் பரிசீலிக்கும் போது, மனுதாரரின் கோரிக்கையில் நியாயம் உள்ளது .
இடைக்கால ஏற்பாடாக, கட்சிக்கான பொதுப் பெயரையும், சின்னத்தையும் ஒதுக்கித் தர கோரும் உரிமை மனுதாரருக்கு உண்டு. எனவே, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் மனுதாரர் பயன்படுத்திய பிரஷர் குக்கர் சின்னத்தையும், அவர்கள் விரும்பும் கட்சிப் பெயரையும் பயன்படுத்த அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது.இந்த உத்தரவை மூன்று வாரங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, 'உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட டி.டி.வி. தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும். மேலும், அனைத்திந்திய அம்மா அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிடர் முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம் ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு பெயரை ஒதுக்க வேண்டும்' என டி.டி.வி. தினகரன் சார்பில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினகரன் அணி இந்த தீர்ப்பை கொண்டாடி வரும் வேளையில் அதிமுக வின் இரு தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் பெரும் சோகத்தில் இருப்பதாக அதிமுக கட்சி வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது .