ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Special Correspondent

கார்த்தி சிதம்பரத்தின் 3 நாள் காவல் முடிவடைந்ததை அடுத்து, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனில் ரானா முன் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, 'கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக புதிய ஆவணங்கள் கிடைத்துள்ளதால், அதை உறுதிப்படுத்துவதற்கு அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது; எனவே, கார்த்தி சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க வேண்டும்' என்று சிபிஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி, 'கார்த்தி சிதம்பரத்தின் காவலை மேலும் நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனினும், அவரது காவலை நீட்டிப்பதற்கு சிபிஐ புதிது புதிதாகக் காரணங்களைக் கண்டுபிடிக்கிறது. அதற்கு சிபிஐ பதில் சொல்லியாக வேண்டும்' என்றார். இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தின் சிபிஐ காவலை, வரும் 12-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி துஷார் மேத்தா அனுமதி வழங்கினார். இந்த 3 நாள்களில், கார்த்தி சிதம்பரமும், அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமனும் கூட்டாக விசாரிக்கப்பட உள்ளனர். இதனிடையே, ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, வரும் 15-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.இது கார்த்தி சிதம்பரத்துக்கு பின்னடைவாக கருத பட்டாலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத் துறை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் மீது கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தன் மீது அமலாக்கத் துறை வழக்கு தொடுத்திருப்பதை எதிர்த்தும், தனக்கு அனுப்பப்பட்டுள்ளஅழைப்பாணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தில்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, நீதிபதிகள் எஸ்.முரளிதர், ஐ.எஸ்.மேத்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கார்த்தி சிதம்பரத்தை வரும் 20-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை கைது செய்வதற்குத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பாக, மத்திய அரசும், அமலாக்கத் துறையும் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, தன் மீது அமலாக்கத் துறை மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றத்தை நாடுமாறு வியாழக்கிழமை அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.