மும்பை; மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி வாழ்கிறான்.
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளான் தாவூத். இந்நிலையில் மும்பை தானே சிறப்பு நீதிமன்றத்தில் தாவூத் மீதான பல்வேறு கிரிமினல் வழக்குகளில் ஆஜரான அவரது வழக்கறிஞர் கேஷ்வானி கூறுகையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடன் அமெரிக்க படையினரால் அதிரடியாக சுட்டுக் கொல்லப்படது போன்றதொரு நிலை தனக்கும் ஏற்பட்டு விட கூடும் என்ற அச்சத்தில் தாவூத் இருப்பதாக தெரிவித்தார்.
எனவே ஒரு சில நிபந்தனைகளடன் இந்தியாவிடம் சரணடைய அவர் விரும்புவதாகவும் கூறினார். சரணடைய முக்கிய நிபந்தனையாக அதிக பாதுகாப்பு கொண்ட மும்பை ஆர்தர் சிறைச்சாலையில் மட்டுமே தான் அடைக்கப்பட வேண்டும் என்று தாவூத் இப்ராஹிம் தெரிவித்துள்ளதாக வழக்கறிஞர் கேஷ்வானி குறிப்பிட்டார்.
தனது இந்த விருப்பத்தை சென்ற ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பிரபல வழக்கறிஞரான ராம்ஜெத்மலானியிடம் தாவூத் தெரிவித்ததாகவும், ஆனால் தாவூத்தின் எந்த ஒரு நிபந்தனையையும் இந்திய அரசு ஏற்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தாவூத், தனது இறுதி மூச்சை இந்தியாவில் விடவே விரும்புவதாக மகாராஷ்ட்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.