பெரியார் சிலையைச் சேதப்படுத்திய திருப்பத்தூர் நகர ஒன்றியச் செயலாளர் ஆர்முத்துராமன் பா.ஜ.க-விலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஷர்மா தன்னுடைய முகநூல் பக்கத்தில், 'திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை' என நேற்று பதிவிட்டிருந்தார். ஹெச்.ராஜாவின் பதிவு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் வன்மையாக கண்டித்து அறிக்கை தர ., இதையடுத்து பயத்தில் பதிவை நீக்கினார் ராஜா ஷர்மா.
இதனையடுத்து நேற்றிரவு (6.3.2018) 9 மணி அளவில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை, பா.ஜ.க நகரச் செயலாளர் முத்துராமன் மற்றும் பிரான்சிஸ் ஆகியோர் கல் எறிந்து சேதப்படுத்தியுள்ளனர்.
அதைப் பார்த்தவர்கள் தடுக்க முற்பட்டபோது, அவர்களையும் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள், முத்துராமனை தாக்கினர். பின்னர், போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் இருக்கும் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
’சிலை உடைப்பு' சம்பவங்களை பா.ஜ.க ஒருபோதும் ஆதரிக்காது. இதனால் பிரதமர் மோடி அதிருப்தியில் இருக்கிறார். இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்மீது மாநில அரசுகள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை பெரியார் சிலையை சேதப்படுத்திய திருப்பத்தூர் நகர ஒன்றியச் செயலாளர் ஆர். முத்துராமன் பா.ஜ.கவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்ட தகவலில் ‘நேற்று பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட வேலூர் மேற்கு மாவட்டம், திருப்பத்தூர் நகர் ஒன்றிய பொதுச்செயலாளர் முத்துராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.