ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் நேற்று மும்பையில் உள்ள பைகுலா பெண்கள் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார்.

Special Correspondent

சி.பி.ஐ. விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மற்றொரு குற்றவாளி இந்திராணி முகர்ஜி முன்பு கார்த்தி சிதம்பரம் சுமார் 4 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

ப. சிதம்பரம் கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், மொரிசீஷியசில் உள்ள நிறுவனம் ஒன்றில் இருந்து 305 கோடி அன்னிய முதலீடு பெற்றது.

இதற்கு நிதியமைச்சகத்தின் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழை பெற, கார்த்தி சிதம்பரம் நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக 10 லட்சம் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறி சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை கடந்தாண்டு வழக்கு பதிவு செய்தது.

இது தொடர்பாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் பலமுறை சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் இந்திராணி முகர்ஜி, மகள் ஷீனா போரா கொலை வழக்கில் சிக்கி மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக, கார்த்தி சிதம்பரத்துக்கு பணம் கொடுத்தது குறித்து குற்றவியல் சட்டம் 164வது பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் முன்பு கடந்த மாதம் 17ம் தேதி வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ முடிவு செய்தது.

இந்நிலையில் லண்டனில் இருந்து திரும்பிய கார்த்தியை சென்னை விமான நிலையத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மாதம் 28ம் தேதி கைது செய்தனர்.

அவர் டெல்லி கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முதலில் கார்த்தி சிதம்பரத்துக்கு ஒரு நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது. அது விசாரணைக்கு போதுமானதாக இல்லை என்றும், இந்திராணி முகர்ஜியுடன் நேருக்கு நேர் விசாரணை நடத்தவுள்ளதால், 15 நாள் காவலில் அனுப்ப வேண்டும் என சிபிஐ கோரிக்கை விடுத்தது. ஆனால் கார்த்தி சிதம்பரத்தை 5 நாள் காவலில் அனுப்ப டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கார்த்தியை 6 பேர் அடங்கிய சி.பி.ஐ. குழு நேற்று காலையில் மும்பையில் உள்ள பைகுலா பெண்கள் சிறைச்சாலைக்கு கொண்டு வந்தது. இந்த குழுவில் பெண் அதிகாரி ஒருவரும் இடம் பெற்றிருந்தார்.

கார்த்தி சிதம்பரம் நேற்று காலை 11.15 மணிக்கு பைகுலா சிறைக்கு கொண்டு வரப்பட்டார். சிறைக்குள் அவர் கொண்டு செல்லப்பட்டதும் சிறைக் கதவுகள் மூடப்பட்டது. வெளியே இருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

சிறைக்குள் நுழையும்போது கார்த்தி சிறைக்கு வெளியே கூடியிருந்த பத்திரிகையாளர்களை பார்த்து கையசைத்தார்.சிறைக்குள் சென்ற பிறகு இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருக்கும் ஐஎன்எக்ஸ் மீடியா முன்னாள் இயக்குனர் இந்திராணி முகர்ஜியுடன் கார்த்தியை நேருக்கு நேர் வைத்து அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர்.

சுமார் நான்கு மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து கார்த்தி சிதம்பரத்தை பிற்பகல் 3.15 மணி்க்கு அதிகாரிகள் வெளியே கொண்டு வந்தனர். அப்போது கார்த்தி சிரித்தபடியே மீண்டும் பத்திரிகையாளர்களைப் பார்த்து கையசைத்தார்.

இது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு என நிருபர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறினார். அவரை சிபிஐ அதிகாரிகள் மீண்டும் மும்பை விமான நிலையம் நோக்கி அழைத்து சென்றனர்.