மோடி கடந்த மூன்று வாரத்தில் மூன்றாவது முறையாக கர்நாடகா சென்றார். மூன்றாம் முறை சென்றது, எடியூரப்பாவின் 75 வது பிறந்தநாள் விழாவுக்காக நடத்தப்பட்ட விவசாயிகள் பேரணியில் பங்கேற்பதற்காக.
அக்கட்சி, 75 வயதான கட்சியின் மூத்த தலைவர்களை, `மார்க் தர்ஷக் மண்டல்` (வழிகாட்டி குழு)-க்கு அனுப்ப முன்பு முடிவு செய்து இருந்தது.ஆனால், கர்நாடக முதல்வர் வேட்பாளராக 75 வயதான எடியூரப்பா இருப்பார் என பிரதமர் நரேந்திர மோடியே கூறுகிறார்.
அந்த விழாவில், எடியூரப்பாவை ஏழை பங்காளனாக, விவசாயிகளின் தோழனாக வர்ணித்த மோடி, எடியூரப்பாவால்தான் விவசாயிகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும், இளைஞர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் என்றார் மோடி . மேலும் அவர், "எடியூரப்பாவின் தலைமையின் கீழ், கர்நாடகா புதிய உச்சங்களை எட்டட்டும்" என்றார்.
தென் இந்தியாவின் முதல் பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா. 2008 ஆம் ஆண்டு கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றார். மூன்று ஆண்டு அதிகாரத்தில் இருந்தவர், ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக பதவியை இழக்க நேரிட்டது.இதன் காரணமாக கோபமடைந்த அவர் தனியாக கட்சி தொடங்கினார். இதனால், பாரதிய ஜனதா கட்சிக்கு 2013 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது. மீண்டும் அவர், 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கட்சிக்கு மோடியால் அழைத்து வரப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், தங்கள் கட்சியின் கர்நாடக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாதான் என்று கூறியது பாரதிய ஜனதா கட்சி. கடந்த ஆண்டு மீண்டும் அதனை உறுதிப்படுத்தியது.
எடியூரப்பா, லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர். இந்த சாதியினர் மாநிலம் எங்கும் பரவி இருந்தாலும், அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது வட கர்நாடகாவில்தான். கர்நாடகாவில் உள்ள மொத்தம் 224 தொகுதிகளில், 105 சட்டமன்ற தொகுதிகள் வடக்கு கர்நாடகாவில்தான் உள்ளன.
"இப்போது பா.ஜ.க சந்திக்கும் பிரச்சனை என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடியூரப்பாவை அது முதல் வேட்பாளராக முன்னிறுத்தியதுதான். அது இப்போது கவைக் கோலில் மாட்டிக் கொண்டுவிட்டது. இப்போது பா.ஜ.க நினைத்தாலும், அதனால் எடியூரப்பாவை தவிர்க்க முடியாது." என்கிறார் அரசியல் ஆய்வாளரும், ஜெயின் பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தருமான சந்தீப் சாஸ்திரி.
அப்படியானால் வழிகாட்டி குழு என்ற கருத்தியல் பா.ஜ.க வால் கைவிடப்பட்டுவிட்டதா?
யாரெல்லாம் பிரதமருக்கு போட்டியாகக் கருதப்படுவார்களோ... அவர்களுக்கானதுதான் இந்த வழிகாட்டி குழு என்கிறார் சந்தீப். ஆனால், இத்தருணத்தில், வழிக்காட்டி குழு என்று பேசிக் கொண்டு முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட எடியூரப்பாவை மாற்றுவது, பா.ஜ.கவுக்கு மோசமான விளைவுகளைதான் ஏற்படுத்தும் என்கிறார்.
காங்கிரஸ் கட்சி, 1990 ஆம் ஆண்டிலிருந்து, லிங்காயத் சமூகத்தின் கோபத்திற்கு ஆளாகிவருகிறது. அப்போது முதல்வராக இருந்த லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த வீரேந்திர பாட்டீலை, காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி நீக்கியதுதான் அதற்கு காரணம்.
காங்கிரஸ் துணை தலைவர் பி எல் சங்கர், "இது பா.ஜ.கவின் வசதி சார்ந்தது. டெல்லியில் அது வசதியாக இருக்கிறது. அதனால், அது சில தலைவர்களை ஓரங்கட்டப் பார்கிறது. இங்கே கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாததால், அது எடியூரப்பாவை முன்னிறுத்துகிறது. அதே நேரம், லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த வாக்குகளையும் அறுவடை செய்ய விரும்புகிறது. "அதிகாரத்திற்காக அவர்கள் தங்கள் கொள்கைகளை தளர்த்திக் கொள்கிறார்கள்" என்கிறார்கள் அரசியல் பார்வையாளார்கள் .