திரிபுராவில் மொத்தம் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 60. இதில், சாரிலாம் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரமேந்திர நாராயண் தேவ்வர்மா உயிரிழந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 59 தொகுதிகளில், பாஜக 35 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சியான திரிபுரா மக்கள் முன்னணி 8 இடங்களிலும் வென்றுள்ளன.
25 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த 2013 தேர்தலில் 49 தொகுதிகளில் வென்று மாணிக் சர்க்கார் தலைமையிலான ஆட்சியை அமைத்திருந்தது. கடந்த தேர்தலில் 10 தொகுதிகளில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் இந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இங்கு பாஜக 43% வாக்குகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 42.7% வாக்குகளையும் காங்கிரஸ் 1.8% வாக்குகளையும் பெற்றுள்ளன.
கடந்த முறை முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் தான் போட்டியிட்ட தண்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அமையப்போகும் பாஜக ஆட்சியில் முதல்வராக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படும் பிப்லப் தேவ், பாணாமலிபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமலிருந்த பாஜக இந்த முறை ஆட்சியைப் பிடிப்பதும், கடந்த முறை 10 உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் இந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாமல் இருப்பதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் மிகப்பெரிய அளவில் பணத்தையும், ஆள்பலத்தையும் பயன்படுத்தியதாலேயே பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியால், முன்னாள் எதிர்க்கட்சிகள் உள்பட, இடதுசாரிகளுக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்ட முடிந்துள்ளது.
அதன் விளைவாகவே அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. பாஜக தன் பணபலத்தைப் பயன்படுத்தி அனைத்து விதமான சக்திகளையும் ஒன்றிணைத்துள்ளது. எந்தவித தார்மிக நெறிகளையும் பின்பற்றாமல் அக்கட்சி இதைச் செய்துள்ளது. இதன் பின்விளைவுகள் கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி.
இடது முன்னணி பெற்றுள்ள வாக்கு சதவீதம் 45 சதவீதம். இப்போதும் நாங்கள் வலுவாகதான் இருக்கிறோம் என்கிறார் சி.பி.எம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராக ஜி. ராமகிருஷ்ணன்.
மேலும் "பா.ஜ.க பண விநியோகம் செய்து இருக்கிறது. அதுமட்டுமல்ல, திரிபுராவில் உள்ள 3174 வாக்கு சாவடிகளில், தேர்தல் அன்று 591 வாக்கு இயந்திரத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஏதேனும் முறைகேடு நடந்து இருக்குமோ என்று நான் சந்தேகிக்கிறேன்." என்கிறார்.