லோக்பால் சட்டப்படி அந்த அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், மக்களவைத் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் ஒரு நீதிபதி ஆகியோர் இடம்பெற வேண்டும்.
பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக்பால் அமைப்பை உருவாக்கும் நோக்கில் லோக்பால் -லோக் ஆயுக்த சட்டம் கடந்த 2013-இல் கொண்டுவரப்பட்டது.
எனினும், இதுவரை அந்த அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டத்தை மத்திய அரசு நடத்தவில்லை.
இது தொடர்பாக மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தலைமையிலான 'காமன் காஸ்' என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2014-இல் ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தது.
லோக்பால் அமைப்பை உருவாக்க அரசுக்கு உத்தரவிடுமாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதனிடையே, 'காமன் காஸ்' அமைப்பு தாக்கல் செய்த பொது நல வழக்கின் விசாரணை கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறுகையில் 'லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் தேர்வு தொடர்பாக விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மக்களவையில் பெரிய எதிர்க்கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இடம்பெறும் ஆலோசனைக் கூட்டம் மார்ச் 1-ஆம் தேதி நடைபெறும்' என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ள வருமாறு மக்களவை காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மத்திய அரசு அண்மையில் அழைப்பு விடுத்தது.
இந்நிலையில், மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கார்கே மறுத்துவிட்டார். இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மிக முக்கியமான ஊழல் எதிர்ப்பு அமைப்பான லோக்பால் தேர்வு நடைமுறையில் எதிர்க்கட்சிகளின் சுதந்திரமான குரலைத் தவிர்க்கும் திட்டமிட்ட முயற்சியாகவே சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது லோக்பால் சட்டத்தின் தத்துவத்தையே நிராகரிக்கிறது. அர்த்தமுள்ள வகையில் பங்கேற்பை உறுதிசெய்வதற்குப் பதில் வெறும் சம்பிரதாயத்துக்காக இந்த வழியை அரசு நாடியுள்ளது.
உண்மையிலேயே லோக்பாலை நியமிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்திருந்தால் அது ஒரு திருத்தச்சட்ட மசோதா வடிவில் ஓர் அவசரச்சட்டத்தைக் கொண்டு வந்திருக்கும்.
மற்ற சட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்குப் பதிலாக எதிர்க்கட்சிகள் தரப்பில் தனிப்பெரும் கட்சியின்தலைவர் என்று மாற்றும் வகையில் அரசு திருத்தம் கொண்டு வந்தது. ஆனால் லோக்பால் சட்டத்தில் அத்தகையே திருத்தத்தை அரசு செய்யவில்லை.
உறுப்பினராகப் பங்கேற்பது, கருத்து கூறுவது, வாக்களிப்பது ஆகிய உரிமைகள் ஏதுமின்றி லோக்பால் தேர்வுக் குழுக் கூட்டத்தில் நான் பங்கேற்பது வெறும் கண்துடைப்பாகவே இருக்கும். எனவே அரசின் அழைப்பை நிராகரிக்கிறேன் என்று கார்கே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
லோக்பால் போரட்டதை முன்னின்று நடத்திய அன்னா ஆசரே, கிரன் பேடி ,ராம்டெவ் பாஜக வுடன் இனைத்து கொண்டு பாஜக ஊழலை அதரித்து வருகின்றனர் என்று சமூக வளைதளத்திலே குற்றம் சாட்டிய வண்ணம் உள்ளனர் .